பொங்கோலில் புதிய விளையாட்டு நிலையம்

பொங்கோலில் புதிய விளையாட்டு நிலையம்

பல வயதினருக்கும் ஏற்ற வசதிகள்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Nov 2026 - 1:04 pm

2 mins read

சிங்கப்பூரின் புதிய ஆக்டிவ்எஸ்ஜி பொங்கோல் விளையாட்டு நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. முன்னதாக, அக்டோபர் 27ஆம் தேதி இந்நிலையம் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.

கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் கட்டுமானத் துறையில் பொருள்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாகத் திட்டமிட்டதைவிட மூன்று ஆண்டுகள் தாமதமாக இந்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

பொங்கோல் நீர்வழிக்கு அருகில் ஐந்து ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆறு தளங்களைக் கொண்ட கட்டடத்தில் பல வசதிகள் உள்ளன. இங்கு 1,500 சதுரமீட்டர் உடற்பயிற்சிக்கூடம், அனைத்துலக நீச்சல் போட்டி விதிமுறைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட நீச்சல் குளம் உட்பட ஐந்து நீச்சல் குளங்களும் உள்ளன.

மேலும், 3,000 பேர் அமரக்கூடிய குழு விளையாட்டு மண்டபமும் 2,000 இருக்கைகள் கொண்ட உள்-விளையாட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20 பேட்மின்டன் திடல்கள் அல்லது ஐந்து பிக்கிள்பால், 14 பூப்பந்துத் திடல்களை அமைக்க முடியும்.

கூடைப்பந்து, கைப்பந்து, வலைப்பந்துப் போட்டிகளையும் சமூக நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்தலாம். சிங்கப்பூர் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டிகளை நடத்தக்கூடிய 5,000 இருக்கைகள் கொண்ட அரங்கமும் இங்குள்ளது. 

இந்நிலையத்தின் குழு விளையாட்டு மண்டபம் சிங்கப்பூர்க் கைப்பந்துச் சம்மேளனத்தின் தலைமையகமாகச் செயல்படும். இதன் மூலம் 2027ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற முக்கியப் போட்டிகளுக்கு தேசிய வீரர்கள் சிறப்பாகத் தயாராக முடியும்.

சக்கர நாற்காலிப் பயனீட்டாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்ற வகையில் இந்நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரர்கள் வீடுகளுக்கு அருகில் தரமான, கட்டுப்படியாகும் கட்டணத்திலான விளையாட்டு வசதிகளைப் பெறுவதை இது ஆதரிக்கும்.

இதற்கு முன்பு பொங்கோல் குடியிருப்பாளர்களுக்குச் செங்காங் விளையாட்டு நிலையமே அருகிலிருந்தது. புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் பொங்கோல் பகுதி மக்களும் இளையரும் வீடுகளுக்கு அருகிலேயே விளையாட்டுப் போட்டிகளைக் காணவும் உடற்பயிற்சி செய்யவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்