உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் தொடங்கப்படும் புதிய நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை விரிவுபடுத்திக்கொள்ள கைகொடுக்கும் புதிய நிலையம் சிங்கப்பூரில் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘ஸ்டேஜ் ஒன்’ (Stage One) என்று அழைக்கப்படும் அந்த நிலையம், ஒன் நார்த்தில் உள்ள ‘ஜேடிசி லாஞ்ச்பேட்’ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 2,422 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தில் பயிற்சி வகுப்புகள், ஆலோசனைப் பிரிவுகள், வர்த்தகங்களை இணைக்கும் வசதிகள் ஆகியவை இருக்கும்.
ஒருங்கிணைப்பு, நிதிதிரட்டு ஆகியவற்றுக்கான வாய்ப்பையும் புதிய நிறுவனங்களுக்கு ஸ்டேஜ் ஒன் நிலையம் வழங்கும்.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் இணைந்து அமைத்த நிலையத்தைத் தொழில்முனைவர்களுக்கான செயலாக்க சமூக அமைப்பு நடத்துகிறது. புதிய நிலையம் அனைத்துலக அளவில் தொடங்கப்பட்ட நிறுவனங்களும் சிங்கப்பூருக்குள் நுழைய கைகொடுக்கிறது. உள்ளூர் புத்தாக்க சமூகத்துடன் கைகோத்து சிங்கப்பூரில் விரிவடைவதற்கான வழிகளையும் ஸ்டேஜ் ஒன் அமைத்துத் தருகிறது.
சிங்கப்பூரில் புதிய நிறுவனத்தைத் தொடங்குவதற்கான வழிகளையும் புத்தாக்கப் பங்காளிகளை நேரடியாகத் தொடர்புகொள்வது பற்றியும் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய நிலையத்தில் கற்றுக்கொள்ளலாம்.
முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஸ்டேஜ் ஒன் நிலையம் குறித்து கடந்த ஆண்டு அறிவித்ததிலிருந்து உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கிட்டத்தட்ட 700 நிறுவனங்கள் ஸ்டேஜ் ஒன் வளாகத்தைப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
ஸ்டேஜ் ஒன் திறப்பு விழாவில் பேசிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங், புதிய நிலையமானது தொழில்துறையில் உள்ளோர் வளங்களையும் பங்காளித்துவத்தையும் பெற உதவும் என்றார்.

