கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் கான்கிரீட் தயாரிப்புக்கான புதிய நிலையம்

2 mins read
89c9ac21-45b6-4cc6-a599-723e13cc1b06
ஜூரோங்கில் உள்ள கான்கிரீட் கலவை நிலையத்தின் கட்டமைப்பைப் பார்வையிட்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் துறைமுகத்தில் சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த கட்டுமானத் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழிற்பேட்டையில் இருக்கும் கான்கிரீட் கலவை நிலையத்தின் கட்டமைப்பு கான்கிரீட் தயாரிப்பு நேரத்தையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து நகர் தட்டைப் (கன்வேயர் பெல்ட்) பயன்படுத்தி, சிமெண்ட், கான்கிரீட் கலவைக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றை துறைமுகத்திலிருந்து சேமிப்புக் கிடங்கிற்கும் தயாரிப்பு நிலையங்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில் ஜூரோங் துறைமுகத்தில் இருக்கும் கான்கிரீட் கலவை நிலையத்தின் கட்டமைப்பு உள்ளது.

$200 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட இந்த வசதி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

கனரக லாரிகள் மூலம் பொருள்களை வேறு இடத்திற்கு எடுத்துசெல்வதற்குச் செலவாகும் நேரத்தையும் பணத்தையும் இந்தக் கட்டமைப்பு குறைக்கிறது.

ஒருங்கிணைந்தக் கட்டுமானத் தொழிற்பேட்டையின் தொடக்க விழா புதன்கிழமையன்று (நவம்பர் 27) நடந்தது. அந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, புலாவ் பொங்கோல் பரட் உட்பட தீவு முழுவதும் இதுபோன்ற தொழிற்பேட்டையை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும்,”இறக்குமதி செய்யப்படும் மணல், சிமெண்ட், கிரைனெட், கட்டுமானத்திற்குத் தேவையான இரும்பு போன்ற பொருள்களைத் தயாரிக்கும் நிலையங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் பொருள்களைத் தீவு முழுவதும் எடுத்துச் செல்வதற்குச் செலவழிக்கும் நேரத்தையும் வளங்களையும் குறைக்கலாம்,” என்றார் திரு டெஸ்மண்ட் லீ.

புலாவ் பொங்கோல் பரட் வட்டாரத்தில் அடுத்த ஒருங்கிணைந்த கட்டுமான தொழிற்பேட்டை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் அதற்கான கட்டுமான வடிவமைப்புகளை முன்மொழியவும் கட்டட, கட்டுமான ஆணையம் அக்டோபர் 28ஆம் தேதி ஏலக்குத்தகை வெளியிட்டது.

இந்த ஆய்வுகள் 2027ஆம் ஆண்டின் முற்பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்