மிகப் பெரிய கலைப் படைப்புகள், சைக்கிள்களை நிறுத்துவதற்கான இடவசதி, குழந்தைப் பராமரிப்பு அறை, சுரங்கங்களைத் துளையிடப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் சிறிய வடிவக் கண்காட்சி - இத்தகைய அம்சங்கள் வட்ட ரயில் பாதையில் அமைந்துள்ள மூன்று நிலையங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
த கெப்பல், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு, கெண்டோன்மண்ட் ஆகிய ரயில் நிலையங்கள் சுற்றுப்புறத்துக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
துறைமுகத்திற்கு அருகில் உள்ள கெப்பல் நிலையத்தின் நுழைவாயிலில் இந்திய யானை, கறுப்புக் காண்டாமிருகம் ஆகியவற்றின் சிற்பங்களைக் காண முடியும்.
கெப்பல் நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவை, அருகிவரும் விலங்கினங்களை எடுத்துக்காட்டுகின்றன.
விசாலமான பசுமை கூரையைக் கொண்ட கெப்பல் நிலையத்தில் தாவரங்கள் வெப்பநிலையைக் குறைத்து உட்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன.
நிலத்திற்குக்கீழ் 20 மீட்டர் ஆழத்தில் உள்ள அந்த நிலையத்தில், வட்ட ரயில் பாதையை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட சுரங்கத்தைத் துளையிடும் இயந்திரத்தின் சிறிய வடிவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் இத்தகைய கண்காட்சியை அமைப்பது இதுவே முதல்முறை என்றது நிலப் போக்குவரத்து ஆணையம்.
நிலையத்திற்குக் கீழே 312 சைக்கிள்களை நிறுத்துவதற்கான இடவசதியும் உண்டு. வட்ட ரயில் பாதையில் இதுபோன்ற வசதி அமைக்கப்படுவதும் இதுவே முதல்முறை.
தொடர்புடைய செய்திகள்
ஷென்டன் வேயில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் ரோடு நிலையம், சிங்கப்பூரின் கடல்துறை மரபுடைமையை நினைவூட்டுகிறது.
நிலத்திற்குக்கீழ் 30 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது அந்த மூன்று மாடி நிலையம். நிலையத்தின் மேற்கூரை கடல் அலைகளை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் எட்வர்ட் ரோடு நிலையத்தில் மேலும் ஒரு தனிச் சிறப்பும் உண்டு. சிறுபிள்ளைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர் அங்குக் குழந்தைப் பராமரிப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பழைய தஞ்சோங் பகார் ரயில் நிலையத்திற்குக்கீழ் அமைந்துள்ளது கெண்டோன்மண்ட் நிலையம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே நிலையத்தை எடுத்துக்காட்டும் வகையில் 24 சுவரோவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
வட்ட ரயில் பாதையைக் குறிக்கும் வகையில் இரண்டு வட்டங்களுக்கு நடுவில் பெரிய கடிகாரம் ஒன்று தளமேடையின் இறுதியில் வைக்கப்பட்டுள்ளது.
வட்ட ரயில் பாதையின் மூன்று புதிய நிலையங்களும் ஜூலை 12ஆம் தேதி அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கும்.
பொதுமக்கள் அந்த ரயில் நிலையங்களை ஜூலை 4ஆம் தேதி காலை 9.30 மணியிலிருந்து இரவு 9 மணிவரை பார்வையிடவும் நிலையங்களுக்கு இடையே இலவசமாகப் பயணம் செய்யவும் முடியும்.

