பவளப் பாறைகளின் மருத்துவ குணத்தைக் கண்டறிந்த புதிய ஆய்வு

பவளப் பாறைகளின் மருத்துவ குணத்தைக் கண்டறிந்த புதிய ஆய்வு

படம்: PETE WEST - FONDATION TARA OCEAN

27 Apr 2026 - 3:28 pm

2 mins read

சிங்கப்பூர்: பவளப்பாறைகளில் உயிர்வாழும் நூற்றுக்கணக்கான புதிய நுண்ணுயிரிகளைப் புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.

வருங்காலத்தில் உயிர்களைக் காக்கும் சிகிச்சையில் இந்தக் கண்டுபிடிப்பு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் இடிஎச் ஸூரிக் (ETH Zurich) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

புதிய வகை நுண்ணுயிரிகளுள் பெரும்பாலானவை, இதற்கு முன்னர் அறிவியல் உலகிற்குத் தெரியாத மரபணுத் தகவல்களைக் கொண்டவை என்று கூறப்பட்டது.

இந்த நுண்ணுயிரிகள், புதிய மருந்துகளையும் மருத்துவப் பொருள்களையும் தயாரிப்பதற்கான தனித்துவமான நொதிப்பொருள்களையும் (enzymes) மூலக்கூறுகளையும் (molecules) உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

இது குறித்து ஆய்வின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஷினிச்சி சுனாகாவா, “பவளப் பாறைகளைப் பாதுகாப்பது என்பது கடலில் உள்ள உயிரினங்களைக் காப்பது மட்டுமன்று. அது, ஈடுசெய்ய முடியாத மூலக்கூறுப் பன்முகத்தன்மை கொண்ட களஞ்சியத்தைப் பாதுகாப்பதாகும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

பவளப் பாறைகளில் உள்ள நுண்ணுயிரிகள், அந்தப் பாறைகளுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதோடு, தொற்றுநோய்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும், கடல் வெப்பம் போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களைச் சமாளிக்கவும் உதவுகின்றன.

2016 முதல் 2018 வரை, ‘இடிஎச்’ ஆய்வாளர்கள் பசிபிக் பெருங்கடலின் 32 தீவுகளிலிருந்து முக்குளிப்பாளர்கள் உதவியுடன் 99 பவளப் பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்தனர்.

பின்னர் பிரான்சில் உள்ள ஓர் ஆய்வகத்தில் அவற்றின் மரபணு மாதிரிகளை மறுகட்டமைப்பு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ காங் சியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் துணைத் தலைவரும், கடல் உயிரியல் வல்லுநருமான ஹுவாங் டான்வெய், இந்தப் புதிய நுண்ணுயிரி இனங்கள் கண்டறியப்பட்டது வியக்கத்தக்கது என்றார்.

இணைப் பேராசிரியர் ஹுவாங், இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், “மருத்துவச் சிகிச்சையில் பயன்படக்கூடிய பொருள்கள் பவளப் பாறைகளில் இருக்கக்கூடும் என்ற கண்டுபிடிப்பு, தென்கிழக்காசியாவில் பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்குக் கூடுதல் உந்துதலை அளிக்க வேண்டும்,” என்றார்.

மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், பாப்புவா நியூ கினி, திமோர்-லெஸ்டே, சாலமன் தீவுகளின் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரம் ‘பவள முக்கோணம்’ (Coral Triangle) என்று அழைக்கப்படுகிறது. அதிகமான பல்லுயிரிகள் நிறைந்திருக்கும் வட்டாரங்களில் ஒன்றான அதற்கு அருகில் சிங்கப்பூர் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பவளப் பாறைஆய்வாளர்ஆய்வுமருத்துவம்