முன்னணி சிங்கப்பூர் பள்ளிகளில் வாழ்க்கை, பெண்களின் நலனில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் ஆராயவுள்ளனர்.
மாணவிகளுக்கு மன உளைச்சலும் நடத்தையில் பிரச்சினையும் ஏற்படுவதற்கான கூடுதல் சாத்தியம் நிலவுவதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
தேசியக் கல்விக் கழகத்தால் நடத்தப்படும் இந்த ஆய்வு, மூன்று பெண்கள் பள்ளிகளிலிருந்தும் ஓர் ஆண்-பெண் பள்ளியிலிருந்தும் 4,200 உயர்நிலைப்பள்ளி மாணவர்களை உள்ளடக்க இலக்கு கொண்டுள்ளது.
சிறிய எண்ணிக்கையிலான ஆண்களை ஆராய்வதற்காக அந்த ஆண்-பெண் பள்ளி ஆய்வில் உள்ளடக்கப்படுவதாக ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் ஜேக்வலின் லீ தில்லி கூறினார்.
2025 முதல் 2028 வரை நடத்தப்படும் இந்த ஆய்வு, முன்னணிப் பள்ளிகளில் பதின்ம வயதுப் பெண்களின் நடத்தையைப் பாதிக்கும் அம்சங்களை ஆராயும் முதல் வகை ஆய்வாக உள்ளது.
தேசிய தேர்வுகள் அல்லது இணைப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் பள்ளிகள் என்று ஆய்வுக் குழுவால் இவை வரையறுக்கப்படுகின்றன.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நான்கு பள்ளிகளின் பெயர்களை வெளியிட டாக்டர் லீ மறுத்தார். ஆனால், அவற்றில் ஒன்று மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி என அறியப்படுகிறது.
பங்கேற்பாளர்கள் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடிக்கும் வரை அல்லது 2028ல் இந்த ஆய்வு நிறைவுறும் வரை ஆண்டுதோறும் இந்த 45 நிமிட இணைய ஆய்வில் பங்கெடுக்கவுள்ளனர். இதற்கு அடுத்தடுத்த ஆய்வுகளிலும் சேர அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
தங்களது நலன், கல்வித்திறன், பள்ளி மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் ஆகிய நான்கு அம்சங்களில் கேள்விகள் கவனம் செலுத்தும்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய தேசியக் கல்விக் கழகத்தின் உளவியல், சிறார், மனித வளர்ச்சித் துறையைச் சேர்ந்த டாக்டர் லீ, காலப்போக்கில் பதின்ம வயதுப் பெண்களைக் கண்காணிக்கும் பேரளவிலான முதல் ஆய்வு இது என்றார்.
ஆய்வுகள், பேட்டிகள் மூலம் இந்த ஆய்வு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள், பள்ளி ஆலோசகர்கள் ஆகியோரையும் ஈடுபடுத்தும். பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான கண்ணோட்டங்களில் வேறுபாடு எதுவும் உள்ளதா என்பதைக் கண்டறிவதே இதன் இலக்கு என்றார் டாக்டர் லீ.
இந்த ஆய்விற்கான யோசனை, 1990களில் அரிஸோனா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டாக்டர் சுனியா லூதர், அமெரிக்காவில் அதிகம் சாதிக்கும் சமூகங்களில் உள்ள மாணவர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் கண்டுபிடிப்புகளால் தூண்டப்பட்டது.

