தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைகளின் மனநலனை ஆராயும் புதிய ஆய்வு

3 mins read
e91b846e-3b79-4bfd-9193-7601c7fb3b1a
ஆய்வை மனநலக் கழகம் நடத்தவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் மன ஆரோக்கியம், நரம்பியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலைக் கண்டறிய ஒரு புதிய ஆய்வை மனநலக் கழகம் தேசியளவில் நடத்தவுள்ளது.

‘பில்டிங் ரிசிலியன்ஸ் ஆண்ட் இன்டர்வென்‌‌ஷன்’ (Building Resilience And interVEntion) (ப்ரேவ்) (BRAVE) என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வு, தெமாசெக் அறக்கட்டளையால் வழங்கப்படும் $1.5 மில்லியன் மானியத்தின் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு நடத்தப்படும். சிங்கப்பூர் இளையர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மனநலக்‌ கழகத்தின் 10 ஆண்டுகால திட்டத்தின் முதல் கட்டமே இது.

சிங்கப்பூர் இளையர்களிடையே காணப்படும் மனநலப் பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2016ல் நடத்தப்பட்ட சிங்கப்பூர் மனநல ஆய்வின்படி இளையர்களில் ஐந்தில் ஒருவர் மனநல நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பாக 18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் இந்த நிலைமைக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்தது.

“குழந்தை பருவத்திலும் இளமைப் பருவத்திலும் மூளை முக்கியமான வளர்ச்சிக்கு உட்படுவதால், அந்த வயதில் அவர்கள் மனநல நோய்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள். முன்கூட்டியே பரி­சோ­தனை செய்து, பிரச்சினைகளைக் கண்டறிந்து குழந்தைகளுக்கு உதவி செய்ய முற்பட்டால், நீண்ட காலத்தில் ஏற்படும் விளைவுகளை மேம்படுத்தலாம்,” என்றார் ப்ரேவ் ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் லிம் சூன் குவான்.

சிங்கப்பூர் இளையர்களிடையே அதிகம் காணப்படும் நான்கு மனநல நோய்களான மதியிறுக்கம், கவ­னக்­குறை மிகைச்­சு­றுதி குறை­பாடு, பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றின் பரவலை இளம் பங்கேற்பாளர்களிடையே அடையாளம் காண்பதை ப்ரேவ் ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

“சிங்கப்பூரில் தனித்துவமான சூழலில் வாழும் ஒரு குழந்தையின் சுற்றுப்புறத்திலுள்ள அபாயங்களையும் பலங்களையும் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை இந்த ஆய்வு எங்களுக்கு வழங்கும். இது, இளையர்களிடையே மனநோய்களைத் தடுப்பதிலும், மனநலத்தை மேம்படுத்துவதிலும் நமக்கு வழிகாட்டும்,” என மனநலக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ப்ரேவ் ஆய்வின் இணை ஆய்வாளருமான இணைப் பேராசிரியர் டேனியல் ஃபங் கூறினார்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய சமூக சேவை மன்றம் முதலிய கூட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் இந்த ஆய்வு, 100க்கும் மேற்பட்ட நிபுணர்களை ஒன்றிணைக்கும்.

மனநலக் கழகத்தின் 10 ஆண்டு கால திட்டத்தின் முதல் கட்டமான இந்த ஆய்வில் பரிசோதனை, நோயைக் கண்டறிதல் ஆகிய இரண்டு பகுதிகள் உள்ளன.

முதல் பகுதியில், சமூக தொடர்பு, கவனம், மனநலம் முதலியவற்றை மதிப்பிட பங்கேற்பாளர்கள் இணையம்வழி சில கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

ஆய்வாளர்கள் பதில்களை ஆராய்ந்து பார்த்ததைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியில், மனநல நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படும் பங்கேற்பாளர்கள் மேலும் ஆழ்ந்த பரிசோதனையை மனநல மருத்துவமனையின் குழந்தை மருந்தகத்தில் (Child Guidance Clinic) மேற்கொள்வார்கள்.

திட்டத்தின் 2ஆம் கட்டத்திலும் 3ஆம் கட்டத்திலும், மனநல நோய்களால் அதிகம் பாதிக்கக்கூடும் என கருதப்படும் இளையர்களுக்கான தலையீட்டு திட்டங்கள் உருவாக்கப்படுவதோடு காலப்போக்கில் அவர்களின் மனநலப் பாதைகளும் கண்காணிக்கப்படும்.

ப்ரேவ் ஆய்விற்கு தகுதியானவர்கள் அடுத்த சில மாதங்களில் மனநலக் கழகத்திடமிருந்து அழைப்புகளைப் பெறுவார்கள். இதில் பங்கேற்க ஆர்வமுள்ள பெற்றோர் www.BRAVE.sg என்ற இணையதளத்திலும் தங்கள் விருப்பத்தை பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்