சிங்கப்பூரின் வெவ்வேறு இனத்தவருக்குக் குறிப்பிட்ட சில மருத்துவச் சிக்கல்களும் மருந்து தொடர்பான பாதக விளைவுகளும் ஏற்படுவதை மரபணு ரீதியாக அடையாளம் காணும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் மரபியல் ரீதியாக ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நோய் ஏற்படும் அபாயத்தைப் பற்றி மேலும் நன்கு புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாண்டு பிற்பாதியில் நடப்புக்கு வரவுள்ள 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டத்தின்கீழ் நோய் தொடர்பான பாதுகாப்புப் பராமரிப்பு உத்தியையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த தலைமுறையினரின் ரத்தத்தில் அதிகக் கொழுப்பளவு இருக்கக்கூடிய மரபணுப் பிரச்சினை இந்தியர், மலாய்க்காரரைக் காட்டிலும் சீனரிடம் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற சீனர்களில் மருத்துவப் பிரச்சினை தொடர்பான பிறழ்வுகள் ஏற்படும் சாத்தியம் 1.05 விழுக்காடு என்றும் இந்தியர்களிடையே இது 0.15 விழுக்காடு என்றும் தெரிவிக்கப்பட்டது.
மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் தொடர்பான பிறழ்வுகள் இந்தியர், சீனரைக் காட்டிலும் மலாய்க்காரர்களிடையே ஏற்படுவது அதிகம் என்றும் ஆய்வு கூறியுள்ளது.
மலாய்க்காரர்களிடையே மார்பக, கருப்பை புற்றுநோய் தொடர்பான பிறழ்வுகள் ஏற்படுவது 0.25 விழுக்காடு என்றும் சீனரிடையே 0.02 விழுக்காடு என்றும் இந்தியர்களிடையே அறவே இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

