2021 ஜூனில் தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு கேட்டு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அந்த ஆண்டில் 346 விண்ணப்பங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2022ல் 520ஆகவும் 2023ல் 526ஆகவும் 2024ல் 631ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த 2,023 விண்ணப்பங்களில் 2,339 புகார்கள் அடங்கியிருந்தன. ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துன்புறுத்தல் புகார்கள் இருந்ததே அதற்கு காரணம்.
நீதிமன்றத்திற்கு வந்த மொத்த விண்ணப்பங்களில் பெரும்பாலானவை இணையத் துன்புறுத்தல் (760), ஒருவருடைய சொந்த விவரங்களை அனுமதியில்லாமல் வெளியிடுவது (719) போன்றவை ஆகும்.
இத்தகைய இணையத் துன்புறுத்தல்களை சமாளிக்க சட்ட அமைச்சும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் இணைந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கவிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் சட்ட துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்தார்.
மார்ச் 4ஆம் தேதி சட்ட அமைச்சின் செலவின ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் பேசினார்.
தமது உரையில் 2024ஆம் ஆண்டு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு மேற்கொண்ட ஆய்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டினார்.
அதில், மூன்றில் இரண்டு பங்கினர், சமூக ஊடகங்களில் துன்புறுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கண்டதாகத் தெரிவித்திருந்தனர்.