சிறார் பாதுகாப்பிற்குப் புதிய சம்பவ நிர்வாக அமைப்புகள்

சிறார் பாதுகாப்பிற்குப் புதிய சம்பவ நிர்வாக அமைப்புகள்

4 mins read
825b480f-a489-4b78-8043-defd9fdf9a59
சிறார் துன்புறுத்தல் என்பது புறக்கணிப்பு, உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான, உளவியல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையின் வடிவத்தில் இருக்கலாம். - கோப்புப்படம்: நியூ பேப்பர்

மே மாதத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைப்புகள், சிறார் பாதுகாப்புக்கான சம்பவ நிர்வாக (சிபிசிஎம்) அமைப்புகளாகச் செயல்பட்டு சிறார் பாதுகாப்பு விவகாரங்களுக்குத் தலைமை தாங்கி, பாதுகாப்புத் தொடர்பான வழக்கு மேலாண்மைப் பணிகளைக் கையாளவிருக்கின்றன.

சிபிசிஎம் அமைப்புகள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை.

குடும்பச் சேவை நிலையங்கள், சிறார் இல்லங்கள், பாதுகாப்பு நிபுணத்துவ நிலையங்கள், தனிநபர் மற்றும் குடும்பப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த சேவைகள் சிறப்பு மையம், சிறார் பாதுகாப்பு நிபுணத்துவ நிலையங்கள், வளர்ப்புப் பராமரிப்பு அமைப்புகள், பாதுகாப்பான மற்றும் வலிமையான குடும்பங்களுக்கான அமைப்புகள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இளையர் இல்லங்கள் ஆகியவை அந்த அமைப்புகளாகும்.

நான்கு வயதுச் சிறுமி மேகன் குங் தன் தாயாராலும் அவரது காதலராலும் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை அமைப்புகள் கையாண்ட விதத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகத் தன்னிச்சையான மறுஆய்வுக் குழு கண்டறிந்ததைத் தொடர்ந்து, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சமூகச் சேவைத் துறையுடன் கலந்தோசித்து இந்த அமைப்புகளை நியமித்துள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல்களை வெளியிட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங், அனைத்துப் பிள்ளைகள், இளையர்கள், குறிப்பாக சிறார் பாதுகாப்புச் சூழலமைப்பிற்குள் இருப்பவர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்வதில் அமைச்சு அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

சிறார் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைச் சரிபார்க்க தகவல்களைச் சேகரித்தல், பாதுகாப்பு, இடர் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல், ஒரு குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

சிபிசிஎம் அமைப்பாக இயங்காத அமைப்புகள், சிபிசிஎம் அமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைத்து சிறார் பராமரிப்பு, சிறார் வளர்ப்புத் திறன்கள் அல்லது பராமரிப்பு ஆதரவு போன்ற, சிறாரின் நல்வாழ்வை மேம்படுத்தும் அம்சங்களில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

சிபிசிஎம் அமைப்புகள் வழக்கு மேலாளர்களாகத் தலைமை தாங்க, இருவகையான அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியமாக இருக்கும்.

சிறார் துன்புறுத்தல் என்பது புறக்கணிப்பு, உடல் ரீதியான, உணர்ச்சி ரீதியான, உளவியல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையின் வடிவத்தில் இருக்கலாம்.

சிறார் துன்புறுத்தல் நடப்பதாக ஒருவர் சந்தேகித்தால் அவர் உடனடியாகத் தேசிய வன்முறைத் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல் உதவித் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.

உடனடிப் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதாகக் கருதப்படும் வழக்குகளுக்கு 24 மணி நேரத்திற்குள் மதிப்பீட்டு முடிவு வழங்கப்படும்.

வழக்கு, சிறார் துன்புறுத்தல் சம்பவமாக கண்டறியப்படாமல் இருந்தால் சிபிசிஎம் அமைப்பாக இயங்காத அமைப்புகள் குடும்பத்துடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

மேலும், கண்காணிப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாகத் தேசிய வன்முறைத் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல் உதவித் தொலைபேசி எண் வழங்கும் வேறு ஏதேனும் வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கு, சிறார் துன்புறுத்தல் சம்பவமாக இருந்தால், வழக்கு மேலாண்மையை ஒரு சிபிசிஎம் அமைப்புக்கு மாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, சிபிசிஎம் அமைப்பாக இயங்காத அமைப்புக்குத் தேசிய வன்முறைத் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல் உதவித் தொலைபேசி எண் தகவலளித்து வழிகாட்டும்.

குடும்பங்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை உறுதிசெய்வதற்காக, வழக்கு மேலாண்மையில் சிபிசிஎம் அமைப்பு தலைமை தாங்கும் அதே வேளையில், அமைப்புகள் தங்களுக்கிடையே தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நட்புறவாடல், பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்பு, உறவுகளை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க சிபிசிஎம் அமைப்புகள், சிபிசிஎம்மாக இயங்காத அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

மேல்முறையீடு செய்ய புதிய ஏற்பாடு

சிபிசிஎம் அமைப்புகள் சிறார் துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாளும் ஆரம்பகட்ட நிலையில் உடன்படவில்லை என்றால் இறுதி முடிவுக்காக அவர்கள் வகைப்படுத்துதல் மதிப்பீட்டுக் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம்.

மே மாதத்திலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள வகைப்படுத்துதல் மதிப்பீட்டுக் குழு, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒரு சம்பவத்தைக் கையாள்வதற்குத் தகுந்த அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும், தொடக்கநிலை வகைப்படுத்துதல் முடிவுகளை மறுஆய்வு செய்யவும் ஒரு சுதந்திரமான அமைப்பாகச் செயல்படும்.

சென்ற ஆண்டு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தனது நாடாளுமன்ற உரையில் 2026 முதல் காலாண்டில் இத்தகைய குழுவொன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

அக்குழுவில் இரண்டு இணைத் தலைவர்கள் இருவர். ஒருவர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொழில்முறைச் சேவைக் குழுவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அத்துறையைச் சேர்ந்த ஒரு தன்னிச்சையான வல்லுநர்.

ஒவ்வொரு சம்பவத்திற்கும் இடம்பெறும் அக்குழுவின் உறுப்பினர்கள் தேவையான துறைசார்ந்த நிபுணத்துவத்தைப் பொறுத்து மாறுபடுவர்.

நடுநிலையாகவும் பாகுபாடின்றியும் இருப்பதை உறுதிசெய்வதற்காக நியமிக்கப்படும் இணைத் தலைவர்களும், குழு உறுப்பினர்களும் குடும்பங்களுடன் பணியாற்றும் அல்லது சிறார் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற பணியில் உள்ள தொழில்முறை நிபுணர்களாக இருப்பார்கள்.

மேலும், அவர்கள் குழு மறுஆய்வு செய்யும் வழக்குகளில் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் இருப்பர்.

ஒரு வழக்குப் பரிந்துரையைப் பெற்றவுடன் அதற்கான தெளிவான காரணங்களைச் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குத் தெரிவித்து, ஆறு வேலை நாள்களுக்குள் குழு தனது முதற்கட்ட முடிவை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்
சிறார்பாதுகாப்புசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு