உடற்குறையுள்ளோர் உள்ள குடும்பங்களை ஆதரிக்க புதிய பணிக்குழு: பிரதமர் வோங்

2 mins read
ee060f30-e959-44e5-8e9a-66f7f9a0ce41
எனேபலிங் வில்லேஜ் நடுவத்தில் உடற்குறையுள்ள ஒருவருடன் உரையாடுகிறார் பிரதமர் லாரன்ஸ் வோங் (நடுவில்). - படம்: சாவ் பாவ்

உடற்குறையுள்ளோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதிய பணிக்குழுவை அமைத்துள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அறிவித்தார்.

அந்தப் பணிக்குழு உடற்குறையுள்ளோர், அவர்களது குடும்பங்களுக்கு அதிக வாய்ப்புகளையும் உறுதியையும் அளிக்கும் பரிந்துரைகளை உருவாக்கி குடும்பத்தை மையப்படுத்திய கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030ஐ நிறைவுசெய்யும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங் தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் அப்பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, மனிதவள மற்றும் நிதி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், கல்வி, மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி ஆகியோர் அந்த ஐந்து உறுப்பினர்கள் ஆவர்.

உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030 உடற்குறையுள்ளோர் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றவும் தங்கள் முழுத் திறனை உணரவும் அதிகாரம் பெற்ற ஒரு உள்ளடக்கிய சமூகமாக சிங்கப்பூர் இருக்கும் என்ற நோக்கம் கொண்டுள்ளது.

வேலை வாய்ப்புகள், சமூக வாழ்விடம், கட்டுப்படியாகும் தன்மை ஆகிய முக்கிய அம்சங்களைப் பணிக்குழு ஆராய்ந்து அவற்றை வலுப்படுத்தும்.

பெருநிறுவனங்கள், சமூகப் பங்காளிகள், பொதுமக்களிடமிருந்து வலுவான ஆதரவைத் திரட்டுவது குறித்தும் உடற்குறையுள்ளோரை சமூகம் ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்குவதையும் வளர்ப்பது எப்படி என்பது குறித்தும் பணிக்குழு ஆராயும்.

“குடும்பத்தை மையமாகக் கொண்டு மேலும் ஆதரவை வலுப்படுத்தவும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வடிவமைக்கவும் தேவையான பணிகளைப் பணிக்குழு மேற்கொள்ளும்,” என்று அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.

“குடும்பங்கள், பராமரிப்பாளர்களின் சவால்களை முறியடிப்பது பணிக்குழுவின் முதன்மை பொறுப்பாகும். உடற்குறையுள்ளோர், பராமரிப்பாளர்கள், பெருநிறுவனங்கள், சமூகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படக்கூடிய தீர்வுகளை உருவாக்க அவர்களுடன் அணுக்கமாக ஆலோசிப்போம்,” என்று துணை அமைச்சர் கோ பெய் மிங் கூறினார்.

சமூக சேவை நிறுவனங்கள், உடற்குறையுள்ளோர், பராமரிப்பாளர்கள், முக்கியப் பங்குதாரர்கள் உள்ளிட்டோருடன் பணிக்குழு கலந்தாலோசித்து, அடுத்த ஆண்டு தனது பரிந்துரைகளை முன்வைக்கும்.

குறிப்புச் சொற்கள்
பணிக்குழுசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுஉடற்குறையுள்ளோர்