பள்ளியிலிருந்து வேலைக்கு அல்லது சமூகச் சேவைகளுக்கு மாறுவது, அல்லது ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவது போன்ற மாற்றங்கள் குறித்த கவலை, உடற்குறையுள்ளோருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் உள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
உடற்குறையுள்ளோருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கக் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட புதிய பணிக்குழு, இந்தப் பகுதியில் கூடுதல் ஆதரவை வழங்க இலக்கு கொண்டுள்ளது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் புதன்கிழமை (மார்ச் 25) தெரிவித்தார்.
பணிக்குழுவின் பரிந்துரைகள் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்றும் திரு கோ கூறினார்
பணிக்குழுவின் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திரு கோ உட்லண்ட்சில் உள்ள மைண்ட்ஸ் வட்டார நிலையம், உட்லண்ட்ஸ் கார்டன்ஸ் பள்ளி, சிறப்பு மாணவர் பராமரிப்பு நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
மைண்ட்ஸ் நிலையத்தில் கைவினை நடவடிக்கைகளில் பங்கேற்ற அவர், மாணவர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற கதை சொல்லும் அங்கத்திலும் கலந்துகொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில மாதங்களாகப் பணிக்குழு, சிறப்புப் பள்ளிகள், உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான சேவைகள், வேலைவாய்ப்பு முகவைகள், சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள் ஆகியோருடன் தீவிரமாகப் பேசிவருவதாகக் குறிப்பிட்டார்.
சிறப்புக் கல்விப் பள்ளிகளிலிருந்து வேலைவாய்ப்பு அல்லது சமூகச் சேவைகளுக்கு மாறும் காலகட்டத்தில் ஏற்படும் கவலைகள் குறித்த கருத்துகளைத் தாம் தொடர்ந்து கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், “ஏற்கெனவே வேலையில் உள்ளவர்கள், அந்த வேலையைத் தக்கவைத்துக்கொள்வது குறித்தோ ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவது குறித்தோ கவலையடையலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்புப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புப் பயிற்சியை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது. இதன்மூலம், மாணவர்கள் தயார்நிலைக்கு வரும்போது வேலைக்குச் செல்வதற்குத் தேவையான திறன்களைப் பெற்றிருப்பதை உறுதிசெய்ய முடியும்.
நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படுவோருக்கான உள்கட்டமைப்பு குறித்த மேம்பாடுகளையும் திரு கோ பகிர்ந்துகொண்டார். அடுத்த ஆண்டுக்குள் பகல்நேர நடவடிக்கை நிலையங்கள், உடற்குறையுள்ளோருக்கான பயிலரங்குகள் ஆகியவற்றில் தலா 500 புதிய இடங்களை உருவாக்கும் இலக்கில் 80 விழுக்காட்டை அரசாங்கம் எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சேவைகளுக்கு இடையிலான தடைகளைத் தகர்ப்பதே இனி வரும் காலங்களில் முக்கியக் கவனமாக இருக்கும்.
பகல்நேர நடவடிக்கை நிலையங்களையும் உடற்குறையுள்ளோருக்கான பயிலரங்குகளையும் ஒரு தடையற்ற தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும் ‘வாழ்வாதாரத் திறன்கள் மேம்பாட்டுப் பயிலரங்கு’ என்னும் முன்னோடித் திட்டத்தை திரு கோ சுட்டிக்காட்டினார். உடற்குறையுள்ளோருடனும் பராமரிப்பாளர்களுடனும் இணைந்து தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்குவதன் மூலம், இது தனிப்பட்ட தேவைகளுக்கேற்பச் சிறந்த ஆதரவை அளிக்கிறது.
“இந்தத் திட்டத்தின் அடிப்படையில், எங்களுக்கு ஆக்ககரமான கருத்துகள் கிடைத்துள்ளன. எனவே, இதனைத் தீவு முழுவதும் விரைவாகவும் விரிவாகவும் செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்,” என்று திரு கோ தெரிவித்தார்.
மேலும், உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான சேவைகளைக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் வைத்திருப்பதற்காக நிதி ஆதரவை மேம்படுத்துவது குறித்தும் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது.
உட்லண்ட்சில் மேற்கொள்ளப்படும் சமூக முயற்சிகளைப் பாராட்டிய திரு கோ, அங்குள்ள சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பலருக்கு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் உணவங்காடிகளில் உணவை வாங்கவும் அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஆதரவளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“இவ்வாறு ஒன்றிணைந்து தொடர்புகொள்ளும்போது, சிறந்த ஈடுபாட்டையும் ஒருங்கிணைப்பையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் உருவாக்க விரும்பும், அனைவரையும் உள்ளடக்கிய கனிவான சமுதாயம் அதுதான் என்று கருதுகிறேன்,” என்றார் திரு கோ.

