உடற்குறையுள்ளோர்க்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் ‘விஸ்தா’

3 mins read
பராமரிப்பாளர்களுக்கு அதிக ஆதரவு வழங்கும் இடமாக அமையும்
645d678d-094d-4f8e-80fc-323b47665ae2
‘எனேபலிங் வில்லேஜ்’ நடுவத்தின் புதிய விரிவாக்கமான ‘விஸ்தா’ எனும் நான்கு மாடிக் கட்­ட­டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உடற்குறையுள்ளோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதிய பணிக்குழு ஒன்றைத் தொடங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

பணிக்குழு உடற்குறையுள்ளோர், பராமரிப்பாளர்கள், சமூகப் பங்காளிகள், முதலாளிகளுடன் இணைந்து அவர்களின் பணியின் ஒரு பகுதியாக ஈடுபடும்.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) லெங்கோக் பாருவில் அமைந்துள்ள உடற்குறையுள்ளோருக்கான ‘எனேபலிங் வில்லேஜ்’ நடுவத்தின் 10வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திலும் இடத்தின் புதிய விரிவாக்கத்தின் திறப்புவிழாவிலும் திரு வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய முதலாவது சமூக இடமாக 2015ல் திறக்கப்பட்ட எனேபலிங் வில்லேஜ், உடற்குறையுள்ளோரும் அவர்களின் பராமரிப்பாளர்களும் பரந்த சமூகத்துடன் எவ்வாறு இணைந்து வாழலாம், கற்கலாம், வேலை செய்யலாம், விளையாடலாம் என்பதை மெய்ப்பித்து வருகிறது.

எனேபலிங் வில்லேஜ் நடுவத்தின் புதிய விரிவாக்கமான ‘விஸ்தா’ எனும் நான்கு மாடிக் கட்டடம் பற்றிப் பேசிய திரு வோங், அதன்மூலம் சேவை வழங்குவதை மேம்படுத்தி, உடற்குறையுள்ளோருக்கு இன்னும் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

“தகவல் தொழில்நுட்பம், நிதி, இசை, ஊடகம் போன்ற ஆக்கபூர்வமான துறைகள் உள்ளிட்ட புதிய துறைகளுக்கான பயிற்சி விரிவுபடுத்தப்படும். உடற்குறையுள்ளோர் சமூகத்துடன் இன்னும் அதிகமாக ஒன்றிணைய முயற்சி எடுக்கப்படும்,” என்றார் திரு வோங்.

அனைத்துத் திறன்களையும் கொண்ட சிங்கப்பூரர்களைத் தொடர்புகொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், நீடித்த உறவுகளை உருவாக்கவும் கூடிய ஓர் இடமாக விஸ்தா திகழும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எஸ்ஜி எனேபலிங்கின் முக்கியத் திட்டங்களான எனேபலிங் பயிற்சிக்கழகம், தற்சார்பு வாழ்வியல் கூடம், வருங்காலப் பராமரிப்புத் திட்டமிடல் வள மையம் ஆகியவற்றை விஸ்தா கொண்டிருக்கும்.

அது உடற்குறையுள்ளோருக்கு அர்த்தமுள்ள ஈடுபாட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கும், பராமரிப்பாளர்களின் நலனை ஆதரிப்பதற்கும், ‘வாய்சஸ் ஆஃப் சிங்கப்பூர்’, ‘கேரிங்எஸ்ஜி’ போன்ற முக்கியப் பங்காளிகளின் இருப்பிடமாகவும் இருக்கும்.

பராமரிப்பாளர்களுக்கும் அதிக ஆதரவு வழங்கும் இடமாக விஸ்தா விளங்கும் என்றும் அதில் புதிய எதிர்காலப் பராமரிப்புத் திட்டமிடல் மையம் அமையும் என்றும் குறிப்பிட்டார் நிதி அமைச்சருமான திரு வோங்.

“அந்த மையம் ,சமூக சேவை நிறுவனங்களுடனும் சமூகப் பங்காளிகளுடனும் கைகோத்து, பராமரிப்பாளர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக விரிவான திட்டங்களை வகுக்க உதவும். நிதி திட்டமிடல், சிறப்புத் தேவைகளுக்கான அறக்கட்டளைக் கணக்கைத் தொடங்குதல் போன்றவற்றிற்கு உதவுதல், நீண்டகால அதிகாரப் பத்திரம் தொடர்பான உதவி போன்ற ஆதரவுகள் காத்துக்கொண்டிருக்கின்றன,” என்று பிரதமர் வோங் விளக்கினார்.

உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030ன்கீழ் சிறப்புக் கல்வி பள்ளி நேரத்திற்கு பின்னர் தேவைப்படும் உதவிகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த திரு வோங், இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் சொன்னார்.

“உடற்குறையுள்ளோர் வேலை வாய்ப்புகள், சிறப்புக் கல்வி பள்ளிகளிலிருந்து வரும் உடற்குறையுள்ள மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு, அதிகத் தேவையுடையோருக்கு பள்ளியிலிருந்து சமூகத்திற்கு மாறுவதற்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் எனப் பல உள்ளன. உடற்குறையுள்ளோர், அவர்களது குடும்பங்களை அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் நாம் ஆதரிக்க வேண்டும். அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், இயன்றவரை நீண்ட காலம் சுதந்திரமாக வாழவும் உதவ வேண்டும்,” என்று திரு வோங் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்