மலாய், முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளையர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயன்பாடு, வேலையில் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் உதவ, சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறப்புப் பணிக்குழு சனிக்கிழமை (அக்டோபர் 11) தொடங்கப்பட்டது.
அந்தப் பணிக்குழுவைத் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி இருவரும் வழிநடத்துகின்றனர்.
சிறப்புப் பணிக்குழு தொடர்பாகக் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கழக மலாய் நற்பணிக் குழு மன்றம், சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்), மெண்டாக்கி, தேசிய இளையர் மன்றம் ஆகியவையும் புதிய பணிக்குழுவுக்குத் துணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
“புதிய பணிக்குழு அடுத்த ஓராண்டு வேலையில் சிறப்பாக முன்னேறுவது, சிங்கப்பூரில் பொருளியல் வளர்ச்சிக்கு ஏற்ப இளையர்களின் திறன்களை மேம்படுத்துவது, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகிய மூன்று திட்டங்களில் உத்திபூர்வமாக கவனம் செலுத்தும்,” என்று மக்கள் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், சமூகம், தொழில் போன்ற 13 வெவ்வேறு துறைகளிலிருந்து இளைய தலைமுறைத் தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமூகத்திற்கும் பணிக்குழுவுக்கும் இடையே பாலமாக இருப்பார்கள்,” என்று துணை அமைச்சர் ரஹாயு தெரிவித்தார்.