சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள் போன்ற சமய அமைப்புகளில் சிறார்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அந்தப் பணிக்குழு, அதிகாரபூர்வமாகவும் இணையம் வழியாகவும் பாதுகாப்பான முறையில் சிறார்கள் எவ்வாறு சமய ரீதியான வழிகாட்டிகளைப் பெறலாம் என்பதை மறுஆய்வு செய்யும்.
சமய ரீதியான போதகர் என்று தம்மையே கூறிக்கொண்ட ஆடவர் ஒருவர் இரண்டு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவத்தை அடுத்து புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமய அமைப்புகளில் உள்ள பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பணிக்குழு, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மதுவிடம் தகவல்களை முன்வைக்கவேண்டும்.
அத்துடன் இவ்வாண்டின் இறுதிக்குள் பணிக்குழு அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கலாசார, சமூக, இளையர் துறையும் முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமும் புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தன.
பள்ளிவாசல்கள், சமயப் பள்ளிகள், இஸ்லாமிய கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் நிர்வாகத்திலும் பாதுகாப்புக் கட்டமைப்புகளிலும் பணிக்குழு கவனம் செலுத்தும்.
சிறுவர்களுடனான தொடர்புகளை நிர்வகிக்கும் விதிகள், கவலைகள், புகார்கள் எவ்வாறு புகாரளிக்கப்பட்டு அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பவையும் அதில் அடங்கும்.
சிங்கப்பூர் இஸ்லாமிய நடுவத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஸாக்கி, நேரடிச் சவால்கள், இடைவெளிகள் ஆகியவற்றை குறித்து அறிந்துகொள்ள பள்ளிவாசல் வாரியங்கள், சமூக உறுப்பினர்கள், அமைப்புகள், கழகங்கள் ஆகியவற்றிலிருந்து பணிக்குழு அடுத்த சில மாதங்களுக்குக் கருத்துகளைத் திரட்டும் என்றார்.
அந்த ஆய்வு, இறுதியாக எவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் என்று கூறிய அவர், பணிக்குழு இப்போதுதான் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் முடிவைப் பற்றிய ஊகங்களை முன்வைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
“நிச்சயமாக, நமது வழிபாட்டுத் தலங்களிலோ சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் இடங்களிலோ, நமது குழந்தைகள், இளையர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று நம்புகிறோம்,” என்றார் திரு ஸாக்கி.
ஏற்கெனவே அபாயத்தில் இருக்கும் ஒரு சிறாருக்குப் பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளுடன் கவலைக்குரிய விவகாரங்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் அமைப்புகள், கலாசாரம், நடைமுறைகளை ஆராய்வது உட்பட ஒரு தடுப்பு முறையைக் கையாள்வது பணிக்குழுவின் வரம்புகளில் அடங்கும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
