குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சை பயத்தைத் தணிக்க புதிய தொழில்நுட்பம்

குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சை பயத்தைத் தணிக்க புதிய தொழில்நுட்பம்

2 mins read
0aaca04f-6c2e-49aa-97d9-15b973d8df75
இளம் புற்றுநோயாளிகள் கதிர்வீச்சு சிகிச்சைக்குத் தயாராவதற்கு உதவும் ஒரு மெய்நிகர் தோற்றக் கருவியைச் சோதிக்கும் மாணவி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்தில் சிகிச்சை பெறும் இளம் புற்றுநோயாளிகளுக்கான மருத்துவ நடைமுறைகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் அவர்களிடம் ஏற்படும் பதற்றத்தைக் குறைக்க மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோயாளிகளான சிறுவர்கள், சிகிச்சை அறைகளில் இருப்பதைப் போன்ற மெய்நிகர் அனுபவத்தைக் கொடுத்து பதற்றத்தைக் குறைக்கிறது அந்தத் தொழில்நுட்பம்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வடிவமைப்பு மற்றும் ஊடகவியல் இறுதி ஆண்டு மாணவர்கள் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்துடன் இணைந்து அந்தப் பாவனைக் கருவியைத் தயாரித்துள்ளனர்.

சிடி ஸ்கேன், கதிரியக்க சிகிச்சை போன்றவற்றுக்கான மருத்துவ நடைமுறைகளுக்குக் குழந்தை நோயாளிகளைச் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தும் நோக்கம் கொண்டது அந்தத் தொழில்நுட்பம்.

அவர்கள் மெய்நிகர் தோற்றத்திலான ‘ஹெட்செட்’ ஒன்றை அணிவதன் மூலம் மெய்நிகர் சிகிச்சைச் சூழலுக்குள் சென்றுவிடுவர். அசையும்போது அவர்களின் பார்வை மற்றும் கேட்கும் தன்மைக்கான உணர்வுகளை அது தூண்டும்.

சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் வெவ்வேறு கருவிகளைக் காண்பதோடு அவை எழுப்பும் ஒலிகளைக் கேட்கவும் அந்த இளம் நோயாளிகளால் முடியும்.

சிடி ஸ்கேன் அறைகளில் பயன்படுத்தக்கூடிய முதல் பாவனைக் கருவி 2025ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களால் தயாரிக்கப்பட்டது.

பின்னர், ஒன்பது பேரைக் கொண்ட மற்றொரு மாணவர் குழு கதிரியக்கச் சிகிச்சைச் சூழலுக்கான மெய்நிகர் தோற்றக் கருவியை உருவாக்கினர். அது இவ்வாண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.

இதுவரை 17 இளம் புற்றுநோயாளிகள் அந்தப் பாவனைக் கருவிகளை சிகிச்சைக்குத் தயாராவதற்கான நடைமுறைகளின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதனைப் பயன்படுத்திய ஆக இளையவரின் வயது ஏழு.

சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்தின் கதிரியக்க சிகிச்சை சேவைப் பிரிவுத் துணைத் தலைவரான உதவிப் பேராசிரியர் எரிக் பாங், “கதிரியக்க சிகிச்சை சிறு குழந்தைகளுக்கு அச்சமூட்டக்கூடியதாக இருக்கும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

“புதிய மெய்நிகர் தோற்ற பாவனைச் சாதனங்கள் பயத்தைக் குறைத்து, நம்பிக்கையை வளர்த்து, சிகிச்சையின்போது எதை எதிர்பார்க்கலாம் என்பதை குழந்தைகள் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்