சிறுநீர்ப்பை புற்றுநோயையும் அந்தச் சிறுநீர்ப் பைக்குக் கீழே ஆண்களிடம் உள்ள சிறிய சுக்கியன் சுரப்பிப் (புரோஸ்டேட்) புற்றுநோயையும் துல்லியமாகக் கண்டறிய புதிய பரிசோதனை முறை ஒன்று கைகொடுப்பதாக சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த ஆய்வு, வழக்கமான பரிசோதனை முறைகளைக் காட்டிலும் சிறுநீர்த் திசுப் பரிசோதனை, புற்றுநோய் பற்றிய தெளிவான தகவலைத் தருவதாகக் கூறுகிறது.
நோயாளிகளுக்குக் குறைந்த வலியையும் குறைந்த உடல்துளைத்தலையும் அந்தப் புதிய பரிசோதனை முறை சாத்தியமாக்குகிறது.
சிறுநீர்ப்பை புற்றுநோயைக் கண்டறிவதில் சிறுநீர் திரவப் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு.
மேலும், சிறுநீர்ப் பாதைக்கு அருகில் புரோஸ்டேட் மற்றும் சிறுநீரகங்கள் இருப்பதால், அவற்றில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவதை அது மேம்படுத்துவதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.
சிறுநீரில் வெளியேற்றப்படும் கட்டிகளின் நுண்ணிய மரபணுத் துண்டுகளை அத்தகைய திசுப்பரிசோதனை கண்டறிகிறது.
அது, 92.3 விழுக்காட்டு சிறுநீர்ப்பை புற்றுநோயாளிகளில், புற்றுநோய் தொடர்பான மாற்றங்களைக் கண்டறிய ஆய்வுக் குழுவிற்குக் கைகொடுக்கிறது.
வழக்கமான சிறுநீர்ப் பரிசோதனை கண்டறிந்த பத்து சிறுநீர்ப்பை புற்றுநோயாளிகளில் மூவரின் நோயை மட்டுமே அபாயமுள்ளவை என உணர்த்தின. ஆனால், புதிய முறை பத்தில் ஏழு நோயாளிகளின் அபாயத்தைத் தெரிவித்தன.
சிறுநீர்ப் பாதையிலிருந்து உதிரும் புற்றுநோய் செல்கள் அல்லது புற்றுநோயாக மாறக்கூடிய செல்களை நுண்ணோக்கி மூலம் சிறுநீரை ஆய்வு செய்து தெரிவிக்க நோயியல் நிபுணருக்குப் புதிய பரிசோதனை முறை உதவுகிறது.
புதிய சிறுநீர்த் திசுப் பரிசோதனை சிறுநீரகப் புற்றுநோயைக் கண்டறிவதில் மேம்பட்ட ஆற்றலை வெளிப்படுத்தினாலும் அதன் ஒட்டுமொத்த உணர்திறன் 14.3 விழுக்காடாகவே உள்ளது.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்கப் புற்றுநோயியல் சங்க மாநாட்டில் வெளியிடப்பட்டன.

