குடும்ப நீதிமன்றங்களின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நீதிமுறை (Therapeutic Justice Model) அக்டோபர் 21ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பங்களில் எழும் பிரச்சனைகளுக்குத் தக்க தீர்வுகளைக் கண்டறிய சட்ட ரீதியில் இந்த நீதிமுறை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ‘ஆக்டகன்’ வளாகத்தில் 10ஆம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், “குடும்ப நீதியைத் திறம்பட நிர்வகிக்க இது ஒரு தனித்துவமான அணுகுமுறை. அதோடு, குடும்பங்களுக்கான ஆதரவையும் படிப்படியாக உருவாக்க இந்த நீதிமுறை உறுதி செய்யும்,” என்று கூறினார்.
குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் இந்தப் புதிய நீதிமுறையில் இரு கூறுகள் உள்ளன. நீதிமன்றத்துக்கு வராமல் தங்கள் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்க முடிந்த குடும்பங்களுக்கு எளிமையான அணுகுமுறை உள்ளது. அதே சமயம், விவாகரத்து, குடும்பம் சார்ந்த முடிவுகள் பற்றிய சவாலான பிரச்சினைகளுக்கு நீதிமன்ற உதவி தேவைப்படும். அதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் கொண்ட நிபுணர் குழுக்கள் இந்தக் குடும்பங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவுவர்.
2023ஆம் ஆண்டில் 6,314 விவாகரத்து வழக்குகள் இருந்தன. அதில் 65.7% எளிமையான அணுகுமுறையை நாடிய வழக்குகள். கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த அணுகுமுறை தற்போது அதிகரித்துள்ளது என்று குடும்ப நீதிமன்றங்கள் தெரிவித்தது.
முடிந்த அளவுக்குக் குடும்பப் பிரச்சினைகளைச் சுமுகமாக நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் தீர்ப்பதை இந்தப் புதிய நீதிமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கியமாக, குழந்தைகள் உள்ள குடும்பங்களில் குழந்தை நலனுக்கு முதலிடம் கொடுத்து முடிவெடுக்க இந்த நீதிமுறை வலியுறுத்தும்.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை குடும்பத் தகராறுகளைச் சமாளிப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம் நடத்தப்பட்டது. அதில் 25 குடும்பங்கள் பங்கேற்றன.
தொடர்புடைய செய்திகள்
அதில் பங்கெடுத்த பெரும்பாலான வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பங்கள் இந்தச் செயல்முறையில் திருப்தி அடைந்துள்ளதாக மனநிறைவுக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தெரியவந்தது.
“குடும்ப நீதிமன்றங்களை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அவசியம். அதன் மூலம், அவர்களுடைய எதிர்காலத்துக்கு நாங்கள் கைகொடுக்கிறோம்,” என்றார் அரசு நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி டே ஹுவி ஹுவி.

