லாசரஸ் தீவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடமாக உருமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறைந்த கரியமில வாயு வெளியேற்றும் சிறுவீடுகள் அங்கு கட்டப்படும். 'டைனி அவே எஸ்கேப் அட் லாசரஸ் ஐலண்ட்' எனும் பெயரில் ஐந்து சிறுவீடுகள் அடுத்த மாதம் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு வீடும் 150 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும். இது கிட்டத்தட்ட, வழக்கமான ஹோட்டல் அறை ஒன்றில் பாதியளவு இருக்கும்.
லாசரஸ் தீவை அடுத்த மூன்று ஆண்டுகளில் சுற்றுப்பயணிகளைக் கவரும் தலமாக மாற்றும் அதேவேளையில் சுற்றுப்புறத்திற்கு மிகக் குறைந்த அளவே தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அதைச் செய்து முடிக்க செந்தோசா மேம்பாட்டுக் கழகம் பரிசீலித்து வருகிறது.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சிறுவீடுகள், மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. வீணான உணவை 24 மணி நேரத்திற்குள் மக்க வைக்கவும் இவற்றில் வசதி உள்ளது.
இவ்வீடுகள் பெரும்பாலும் சூரியசத்தி மூலம் மின்சக்தி விநியோகம் பெறுகின்றன.
ஜூன் மாதத்தில் இருந்து கட்டங்கட்டமாக சிறு கடை, நீர் விளையாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
உலகளவில் நீடித்த நிலைத்தன்மையுடன்கூடிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக சிங்கப்பூர் அங்கீகரிப்பட்டுள்ளது.
லாசரஸ் தீவு சிறுவீடுகள், 2030ஆம் ஆண்டுக்குள் நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட நகரமாக உருவெடுப்பதன் தொடர்பில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டையும் அதற்காக நாடு மேற்கொள்ளும் முயற்சியையும் காட்டுவதாகத் திரு டான் குறிப்பிட்டார்.