பொங்கோல் குழுத்தொகுதிக்குப் புதிய நகர மன்றம் அமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார்.
குடியிருப்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன், கட்டுமானத் தரம், வனவிலங்குகளால் ஏற்படும் தொந்தரவு, இணைப்புச் சிக்கல்கள் போன்ற வட்டார அளவில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மதிப்பாய்வுகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொங்கோல் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் அணிக்குத் தலைமை தாங்கும் திரு கான், ‘ஒன் பொங்கோல்’ உணவங்காடி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பிற்பகல், வேட்பாளர்களுடன் தொகுதி உலா மேற்கொண்டார். அவர்களுக்கு ஆதரவு திரட்டப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தொகுதி உலாவில் பங்கேற்றார்.
தொகுதியின் மேம்பாடு, வசதிகளின் மேலாண்மை முதலியவற்றின் தொடர்பாகக் குடியிருப்பாளர்கள் எழுப்பியுள்ள பல்வேறு கவலைகளைத் தீர்க்கப் புதிய நகர மன்றம் முயற்சி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நகர மன்றத்தின் தலைவராக உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் செயல்படுவார் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.
பொங்கோல் வட்டாரம் விரைவான வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், நார்த்ஷோர் போன்ற புதிய பகுதிகளில் சில பிரச்சினைகள் நிலவுவதை அவர் ஒப்புக்கொண்டார்.
கட்டுமானக் குறைபாடுகள், குரங்குகள், பறவைகள் போன்ற வனவிலங்குகளின் தொந்தரவுகள் குறித்துக் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்றும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் மேம்பாட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் திரு கான் கூறினார். சிறந்த முடிவுகளை உறுதிசெய்வோம் என்று குடியிருப்பாளர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
சிங்கப்பூரின் இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் துணைப் பிரதமர் வலியுறுத்தினார்.
“பொங்கோல் வட்டாரத்துக்கு மட்டுமல்லாமல், இளையர்கள் என்ன விரும்புகிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்து, புரிந்துகொள்ள முயற்சி செய்துவருகிறோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கப் பொருளியல் வளர்ச்சி அவசியம் என்றும், சிங்கப்பூர்ப் பொருளியலுக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்பட அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பொங்கோல் குடியிருப்பாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தத் தமது முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவர்களின் கவலைகளை நேரடியாகக் கேட்டுப் புரிந்துகொள்வதற்காக உணவு அல்லது காபி அருந்தும்போதும் அவர்களுடன் நேரம் செலவிட்டுவருவதாகத் திரு கான் தெரிவித்தார்.
“குடியிருப்பாளர்கள் பெருமையுடன் வாழக்கூடிய ஓர் இடமாகப் பொங்கோலை நிலைநாட்ட நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்,” என்று அவர் உறுதியளித்தார்.