இளம் புற்றுநோயாளிகள் குறித்த விழிப்புணர்வுக்காக புதிய ரயில் அறிமுகம்

இளம் புற்றுநோயாளிகள் குறித்த விழிப்புணர்வுக்காக புதிய ரயில் அறிமுகம்

2 mins read
a9a0c81a-59b6-4a6e-bebf-e65091c20633
‘இது நமது ஒன்றிணைந்த பயணம்’ என்ற இயக்கத்தின்கீழ் இளம் புற்றுநோயாளிகள் அறக்கட்டளையும் எஸ்எம்ஆர்டியும் இணைந்து ‘ஹேர் ஃபோர் ஹோப்’ கருப்பொருள் கொண்ட ரயில் ஒன்றை அறிமுகப்படுத்தின. - படம்: இளம் புற்றுநோயாளிகள் அறக்கட்டளை

இளம் புற்றுநோயாளிகள் அறக்கட்டளையும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து முதல் முறையாக ‘ஹேர் ஃபோர் ஹோப்’ கருப்பொருள் கொண்ட ரயில் ஒன்றை வட்ட ரயில் பாதையில் அறிமுகப்படுத்தின.

‘இது நமது ஒன்றிணைந்த பயணம்’ என்ற இயக்கத்தின்கீழ் இந்த ரயில் திங்கட்கிழமை (மே 4) ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் அறிமுகம் கண்டது.

துவக்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ வான் லிங், “இம்முயற்சி மேலும் பலரிடையே இளம் புற்றுநோயாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” எனக் கூறினார்.

இந்த ரயிலில் இளம் புற்றுநோயாளிகள், அறக்கட்டளையின் பயனாளர்கள், அவர்களது பராமரிப்பாளர்கள், குடும்பத்தினர், ஆதரவாளர்கள் போன்றோரின் கதைகளும் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

இக்கதைகளை ரயில்கள் போன்ற அதிக மக்கள் புழங்கும் இடத்தில் விளம்பர பலகைகள்வழி கூறுவது, புற்றுநோயால் அவதியுறும் சிறார்களுக்கு உதவ பலரை முன்வரச் செய்யும் என சிறார் புற்றுநோய் அறக்கட்டளை நம்புகிறது. 

“மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்யும்போது, இந்தக் கதைகள்வழி, அவர்களுக்கு எங்கள் சிறார்களுடன் ஒரு வலுவான பிணைப்பு ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு,” என்றார் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கோ ஷுகாய்.

“அதன் வெளிப்பாடாக மக்கள் ‘ஹேர் ஃபோர் ஹோப்’ நிகழ்ச்சிக்குப் பதிவு செய்வது, நன்கொடை வழங்குவது போன்ற வழிகளில் தங்கள் ஆதரவைத் தெரிவித்தால் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்,” என்றும் அவர் கூறினார்.   

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் லாம் ஷியாவ் காய், “முதல் முறையாக எஸ்எம்ஆர்டி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 23 ஆண்டுகால வரலாறு கொண்ட ‘ஹேர் ஃபோர் ஹோப்’ உன்னத முயற்சியில் பங்கு கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று கூறினார்.

புற்றுநோயால் அவதியுற்ற தம் பேத்திக்காகவும் மற்ற சிறுவர்களுக்காகவும் ஆதரவளிக்கும் வண்ணம் கடந்த ஐந்தாண்டுகளாக தனது தலைமுடியை மழித்து வருகிறார் ஜூடி டே, 63.

சிறார் புற்றுநோய் அறக்கட்டளையின் ஆதரவாளர் 63 வயது திருவாட்டி ஜூடி டே.
சிறார் புற்றுநோய் அறக்கட்டளையின் ஆதரவாளர் 63 வயது திருவாட்டி ஜூடி டே. - படம்: இளம் புற்றுநோயாளிகள் அறக்கட்டளை

“இந்தப் புதிய ரயிலின்வழி பலரும் முன்வந்து, என் பேத்தியைப்போல புற்றுநோயால் அவதியுறும் சிறார்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென விரும்புகிறேன்,” என்று அவர் கண்கலங்கியவாறு கூறினார்.

வட்ட ரயில் பாதையில் மே 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இந்த ரயில் இயங்கும்.

2003ஆம் ஆண்டு முதல் இதுவரை 75,000 பேர் தங்களது தலைமுடியை இறக்கியுள்ளதோடு, $54 மில்லியன் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதென்றும் சிறார் புற்றுநோய் அறக்கட்டளை தெரிவித்தது.

இவ்வாண்டின் ‘ஹேர் போர் ஹோப்’ நிகழ்ச்சி ஜூலை 25 , 26ஆம் தேதிகளில் விவோசிட்டி கடைத்தொகுதியில் நடக்கவிருக்கிறது. 

குறிப்புச் சொற்கள்