சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் தயார்ப்படுத்த புதிய மன்றம்

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் தயார்ப்படுத்த புதிய மன்றம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Nov 2026 - 3:09 pm

2 mins read

புதிய பராமரிப்பு முறைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்ப சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் வேலைகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், எதிர்காலத்திற்காக அந்த ஊழியரணியைத் தயார்ப்படுத்த புதிய முத்தரப்பு மன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் வெளியே, சமூக அளவில் அதிகப் பராமரிப்பை வழங்கும் மாற்றத்திற்கு ஆதரவளிக்க, குறிப்பாகத் தாதியர், மருந்தாளர்கள், துணைச் சுகாதார நிபுணர்கள் ஆகியோரின் வேலைகளை மறுவடிவமைப்பதும் மன்றத்தின் முயற்சிகளில் அடங்கும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுகாதாரப் பராமரிப்பு வேலைகள், திறன்கள், பயிற்சி மன்றம் முக்கியக் கவனம் செலுத்தும் மூன்று அம்சங்களில் அதுவும் ஒன்று.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் மனிதவளக் கருத்தரங்கில் அதனைத் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நோயாளிப் பராமரிப்பு வேலைகள், வெற்றிகரமான வேலை மறுவடிவமைப்புக்கான ஓர் எடுத்துக்காட்டு.

உதவிப் பணியாளர்கள் இப்போது மேற்பார்வையின்கீழ் காயங்களுக்குக் கட்டுப்போடுதல், ‘இசிஜி’ எனப்படும் இதய மின் அலை பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், நோயாளிகளிடமிருந்து ரத்த மாதிரிகளை எடுத்தல் போன்ற கூடுதல் செயல்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களுடன் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் தயார்ப்படுத்துவது புதிய மன்றம் முக்கியக் கவனம் செலுத்தும் இரண்டாவது அம்சமாகும்.

“சுகாதாரப் பராமரிப்பு மேலும் குழு அடிப்படையிலானதாகவும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாறிவருவதால், பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்களைத் திறம்படப் பயன்படுத்துவது உள்ளிட்ட புதிய திறன்கள் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தேவைப்படும்,” என்று திரு ஓங் கூறினார்.

“இதற்கு வேலை, திறன் பயிற்சிகள், பராமரிப்பு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதோடு நேரடியாக இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கற்றுக்கொள்ளும் அனைத்தையும் தங்கள் வேலைகளில் பயன்படுத்த முடியும்,” என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

பராமரிப்பு முறைகள் மாறும்போது அல்லது தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்களால் ஊழியர்கள் சிலர் தங்களது வேலைகளை இழக்கும் சூழல் ஏற்படக்கூடும்.

அத்தகைய மாற்றங்களின்போது ஊழியர்களுக்கு மன்றம் ஆதரவு அளிக்கும் என்றும் அதுவே முக்கியக் கவனம் செலுத்தப்படும் மூன்றாவது அம்சம் என்றும் திரு ஓங் தெரிவித்தார்.

புதிய மன்றத்தைச் சுகாதார அமைச்சும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின்கீழ் இயங்கும் சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் தொழிற்சங்கமும் இணைந்து நிறுவியுள்ளன. சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் கே.தனலட்சுமி ஆகியோர் அதற்கு இணைந்து தலைமைதாங்குகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்