சிங்கப்பூரில் புதிய வடிவிலான மோசடியில் $38,000 பணம் பறிபோயுள்ளது.
பள்ளிக் கட்டணம் அல்லது துணைப்பாடக் கட்டணம் கட்டுமாறு நடைபெற்றுள்ள மோசடிச் சம்பவம் அது.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதுபோன்ற 16 மோசடிச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கல்வி நிலையங்களைப் போல போலியாக மின்னஞ்சலை உருவாக்கி அதன் வழியாக மோசடிகள் அரங்கேற்றப்பட்டதாகக் காவல்துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
போலியான பள்ளிக்கூட மின்னஞ்சலைப் பயன்படுத்தி, அவசரமாக, உடனடியாக பள்ளிக்கட்டணம், துணைப்பாடக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோசடிக்காரர்கள் எச்சரிக்கைத் தகவல் அனுப்புவார்கள்.
பணத்தை அவசரமாக அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு ஒன்றை மின்னஞ்சலில் அவர்கள் இணைத்திருப்பார்கள்.
அதனைப் பார்த்து பணத்தை அனுப்பியவர்கள், பள்ளிக்கூடத்தில் இருந்து உண்மையான அறிவிப்பு வந்த பின்னர்தான் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணருவார்கள் என்று காவல்துறை விளக்கியது.
அண்மையில் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் மின்னஞ்சல்களை மோசடியாகப் பயன்படுத்தி, கல்விக் கட்டணம் கேட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட கட்டணங்களை அந்தந்த பள்ளிக்கூடங்களின் அதிகாரபூர்வ பணம் செலுத்தும் முறையிலேயே கட்டவேண்டும் என்றும் பணத்தை அனுப்புமுன் ஒருதடவைக்குப் பல தடவை சோதித்துக்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

