சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்களுக்கு புதிய வகைக் காலணி

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்களுக்கு புதிய வகைக் காலணி

படம்: சமூக ஊடகம்/சாவ்பாவ்

08 Oct 2026 - 5:07 pm

2 mins read

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் 2027 ஜனவரி முதல் புதிய வடிவமைப்பு கொண்ட காலணிகளை அணிவர்.

‘சிங்கப்பூர் கேர்ள்’ என சிறப்பாக அழைக்கப்படும் அந்த விமானப் பணிப்பெண்களுக்கு சிறந்த தோற்றத்தைத் தரக்கூடிய, பாதுகாப்பான காலணிகளை வழங்க ‘பேஷியன்’ நிறுவனத்துடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கைகோத்துள்ளது.

புதிய காலணிகள், கால் விரல்களை மூடக்கூடிய கூம்புப் பகுதியைக் கொண்டிருக்கும். கூடுதல் மென்மை அளிப்பதற்காக காலணிகளின் உட்புறம் தோல்பொருள்கள் பொருத்தப்பட்டிருக்கும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

“கால் விரல்களை மூடக்கூடிய வடிவமைப்பைக் கொண்ட காலணி, விமானத்திற்குள் பணியாற்றும்போது சிந்தும் திரவங்களிலிருந்தும் கீழே விழும் பொருள்களிலிருந்தும் பணிப்பெண்களைப் பாதுகாக்கும்,” என்றார் அவர்.

வடிவமைப்பை உருவாக்கும் நடைமுறையின்போது விமானப் பெண் ஊழியர்களின் யோசனைகளைப் பெற்று ‘பேஷியன்’ நிறுவனத்துடன் நிறுவனம் அணுக்கமாகப் பணியாற்றியதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பாரம்பரிய ‘பாத்திக்’ அச்சு இந்தப் புதிய வடிவமைப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பணிப்பெண்ணின் பதவிக்குத் தகுந்தாற்போல் சாரோங் கெபாயா உடைகளுக்குப் பொருந்தும் வகையில் காலணியின் நிறம் மாற்றப்படும்.

புதிய வகைக் காலணிகள் வழங்கப்படும் தகவலை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் வியாழக்கிழமை (அக்டோபர் 8) உறுதிசெய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அந்தப் புதிய காலணிகள் கட்டம் கட்டமாக எல்லா விமானப் பணிபெண்களுக்கும் வழங்கப்படும் என்றது.

அதேபோல, காலம் காலமாக முன்பகுதி திறந்த நிலையில் வழங்கப்பட்டு வந்த ‘சேண்டல்ஸ்’ காலணிகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும்.

புதிய காலணிகளின் புகைப்படங்கள் கடந்த வாரம் இணையத்தில் முதன்முதலில் வெளியானதாக, ‘லியான்ஹே சாவ்பாவ்’ சீன நாளிதழ் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
காலணிசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்செய்தித்தாள்