முன்களக் காவல்துறை அதிகாரிகளுக்கு விரைவில் புதிய வகை மேலங்கி வழங்கப்படலாம்.
இவ்வகை மேலங்கி அதிகாரிகளைக் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து அவர்களது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கி, கைவிலங்கு, கைத்தடி, தொடர்புக் கருவிகள் ஆகியவற்றை வைத்திருக்க உதவும் அவர்களது இடைவாரின் எடையைக் குறைத்து முதுகு வலி ஏற்படுவதைத் தவிர்க்க புதிய வகை மேலங்கி உதவும்.
தற்போதைய நிலவரப்படி காவல்துறை அதிகாரிகளின் இடைவாரில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் எடை ஏறத்தாழ ஐந்து கிலோ கிராம் ஆகும்.
தொடர்புக் கருவிகள், கைவிலங்கு உறை, குறிப்புப் புத்தகம் மற்றும் பேனாக்கள் போன்ற சிறு பொருள்களுக்கான உறை ஆகியவை புதிய வகை மேலங்கியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடைவாரின் எடை கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறையும் என்று கூறப்படுகிறது.
புதிய வகை மேலங்கியைக் காவல்துறையும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து உருவாக்குகின்றன.
காவல்துறை அதிகாரிகளின் உடல் வெப்பநிலையைச் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் குறைக்கும் ஆற்றலை இவ்வகை மேலங்கி கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலங்கிக்கான யோசனை முதலில் 2015ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பான மேம்படுத்தப்பட்ட பரிந்துரை 2023ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது.
மாதிரி மேலங்கி 2024ஆம் ஆண்டு சிங்கே ஊர்வலம், சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயம், மரினா பே புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகிய நாள்களில் சோதனைத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது.
முதலில் நடத்தப்பட்ட சோதனைத் திட்டத்தின்போது அந்த மேலங்கியை அணிவது சிரமமாக இருந்ததாகக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
மேலங்கியில் இருந்த பைகள் மிகவும் சிறிதாக இருந்ததாகவும் அவற்றில் பொருள்களை வைப்பது எளிதன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மேலங்கி 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அது, தற்போது ரோச்சோர் அக்கம்பக்கக் காவல் நிலையத்தில் ஒரு மாதக் கால சோதனைத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

