தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகம் (NTUC’s Employment and Employability Institute) தனது வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களுக்குச் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ‘விசிசி’ மெய்நிகர் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர் சேவை (Virtual Career Coach) நிலையத்தை அக்டோபர் 4ஆம் தேதி ‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ (Our Tampines Hub) அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தது.
வேலை தேடுபவர்களுக்கு உதவும் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களுக்கு இந்த மின்னிலக்கச் சேவை, தொழில் ஆலோசனை சேவைகளை வழங்கத் துணைபுரியும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த ‘விசிசி’ வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர் சேவையிலிருந்து சுமார் 1000 பேர் வேலை தேடும் முயற்சியில் பயனடைந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், வடகிழக்கு மாவட்ட மேயர் டெஸ்மண்ட் சூ இருவரும் கலந்துகொண்டு அந்தப் புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தனர்.
“சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் அந்தப் புதிய வளாகம், இங்கு வசிப்பவர்களுக்குத் தொழில் ஆதரவு மற்றும் வளங்கள் கிடைப்பதை எளிதாக்குகிறது. மேலும், அவர்கள் வேலை தொடர்பான சேவைகளை விரைவாகப் பெறவும் அது உதவுகிறது,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் டான் தமது உரையில் கூறினார்.
‘விசிசி’ வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர் சேவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பாராட்டிய மேயர் டெஸ்மண்ட் சூ, “அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் சமூக ஆதரவை ஒன்றிணைக்கிறோம்,” என்றார்.
வேலை தேடுபவர்களின் வாழ்க்கைத்தொழில் இலக்குகள், ஆர்வங்கள் மற்றும் தற்போது உள்ள திறன் தொகுப்புகளுக்கு ஏற்ற திறன்களை ‘விசிசி’ சேவை அடையாளங்கண்டு அதற்கேற்ற வேலை வாய்ப்புகளை ஒரு பட்டியலாக ஒருங்கிணைக்கிறது. இதனால், வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்கள் வேலை தேடுபவர்களுடன் திறம்பட உரையாடி, அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை அணுக உதவலாம்.
மென்பொருள் நிறுவனத்தில் முன்னணித் திட்ட மேலாளராக சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றிய திரு மோகன், புதிய வேலை வாய்ப்புக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகத்திலிருந்து (e2i) உதவி நாடினார்.
தொடர்புடைய செய்திகள்
“‘விசிசி’ நுண்ணறிவு சேவையின் மூலம் கிடைத்த தகவல்கள் என் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளருக்கு உதவியாக இருந்தது. வேலை தேடலில் உள்ள முக்கியச் சவால்கள், குறிப்பிடப்பட்ட திறன்கள், வேலை விண்ணப்பங்கள் போன்றவற்றை அவர் எனக்கு எளிதாக எடுத்துரைத்தார்,” என்றார் திரு மோகன்.
தற்போது, அவரது திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பணி தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
“இந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது,” என்று தெரிவித்தார் திரு மோகன்.

