பாலர் பள்ளி ஆசிரியர்களின் நலம்பேண உதவும் காணொளித் தொடர் அறிமுகம்

2 mins read
664f603f-cf35-491d-877c-8f4140fb0224
ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் பொத்தானை அழுத்தி ஆசிரியர்களுக்கான தமது ஆதரவைத் தெரிவித்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் (நடுவில்). - படம்: சாவ்பாவ்

சக ஆசிரியர் ஒருவர் முதுகுவலியிலிருந்து மீண்டுவந்த சமயத்தில் பல ஆசிரியர்களும் அவருடைய பணிகளைப் பகிர்ந்து உதவியதை நினைவுகூர்ந்தார் ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் துர்கா கோபிநாத், 36.

“பாலர் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் உடல்நலனைப் பேணுவது அவசியம். அவர்கள் அடிக்கடி குழந்தைகளைக் குனிந்து தூக்குகின்றனர்; நெடுநேரம் நிற்கின்றனர்; அங்குமிங்கும் நடமாடவும் இசை, நடன நடவடிக்கைகளில் ஈடுபடவும் செய்கின்றனர்,” என்றார் திருவாட்டி துர்கா.

இந்நிலையில், பாலர் பள்ளி ஆசிரியர்கள் பணியிடத்தில் முதுகு, மூட்டுவலியைத் தவிர்க்கும் செயல்முறைகளைக் காட்டும் புதிய காணொளித் தொடர் வெளியாகியுள்ளது.

‘சரியாக நகரவும், ஒளிமயமாகக் கற்பிக்கவும்’ (Move Right, Teach Bright) எனும் இத்தொடரின் முதல் இரு காணொளிகள், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் (ECDA) யூடியூப் தளத்தில் (https://www.youtube.com/@ECDASingapore) பதிவேற்றப்பட்டுள்ளன.

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக சோ சுவீ ஹோக் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் டாக்டர் இங் வீ டோங் உடன் இணைந்து இக்காணொளித் தொடரை உருவாக்கியுள்ளது.

Watch on YouTube
Watch on YouTube

“புதிதாகச் சேரும் கல்வியாளர்களுக்கு எப்படிக் குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது என நாங்கள் பயிற்சியளிக்கிறோம். அவற்றுக்கு வலுசேர்க்கும் கூடுதல் கருவியாகவும் ஒரு நினைவூட்டலாகவும் இத்தொடர் அமையும்,” என்று திருவாட்டி துர்கா குறிப்பிட்டார்.

ஆசிரியர் நலனுக்காக ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் ஏற்கெனவே சில வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆசிரியருக்கு ஏதுவான உயரத்தில் டயப்பர் மாற்றும் வசதிகள், தொட்டில்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.

ஆசிரியரின் உயரத்துக்கு ஏற்றவாறு நகர்த்தக்கூடிய மரத்தொட்டில், முதுகுவலி ஏற்படாமல் செயல்பட ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிவகுக்கிறது.
ஆசிரியரின் உயரத்துக்கு ஏற்றவாறு நகர்த்தக்கூடிய மரத்தொட்டில், முதுகுவலி ஏற்படாமல் செயல்பட ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிவகுக்கிறது. - படம்: ரவி சிங்காரம்
ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் துர்கா கோபிநாத், புதிய காணொளித் தொடரை வரவேற்றார்.
ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் துர்கா கோபிநாத், புதிய காணொளித் தொடரை வரவேற்றார். - படம்: ரவி சிங்காரம்

செப்டம்பர் 1ஆம் தேதி காலை ஒன்பொங்கோலில் நடந்த ‘ஸ்கூல்4கிட்ஸ்’ பாலர்பள்ளி ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் புதிய காணொளித் தொடரைச் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

“சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் தொடர்ந்து ஆரம்பகல்விக் கல்வியாளர்கள் சந்திக்கும் சவால்களைப் புரிந்துகொண்டு தீர்வளிக்கும்,” என்றார் அவர்.

பெரியவர்கள் அமரக்கூடிய நாற்காலிகள் ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர்பள்ளி ஆசிரியர்களை முதுகு, மூட்டு வலியிலிருந்து காக்கின்றன.
பெரியவர்கள் அமரக்கூடிய நாற்காலிகள் ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர்பள்ளி ஆசிரியர்களை முதுகு, மூட்டு வலியிலிருந்து காக்கின்றன. - படம்: ரவி சிங்காரம்

பாலர் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் இயக்கம்

“99% ஃபார் தி 1%” எனப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நடத்தும் இயக்கத்தின் ஓர் அங்கமாக ஸ்கூல்4கிட்ஸ்@ஒன் பொங்கோல் கொண்டாட்டம் நடைபெற்றது.

சிங்கப்பூரின் ஊழியரணியில் 1 விழுக்காட்டினராகத் திகழும் பாலர் பருவக் கல்வியாளர்களைப் பாராட்ட மீதி 99 விழுக்காட்டினரை ஊக்குவிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கம்.

இவ்வியக்கத்தின்கீழ் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த கண்காட்சிகளில் 6,900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலர் பருவக் கல்வியாளர்களைப் பாராட்டினர். 27,000க்கும் மேற்பட்டோர் இணையம் வழியாகப் பாராட்டினர். go.gov.sg/99forthe1percent இணையத்தளத்துக்குச் சென்று மக்கள் தம் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

சமூக நிறுவனமான ‘பிரீஸ்கூல் மார்க்கெட்’, சிங்கப்பூர் பாலர் பருவக் கல்வியாளர்கள் சங்கம் (AECES) இணைந்து பத்தாம் ஆண்டாக ஆரம்ப கல்விக் கல்வியாளர்களுக்காகக் கைகோத்துள்ளன.

அவை சிங்கப்பூர் முழுவதும் பாலர் பருவக் கல்வியாளர்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கியுள்ளன. மேலும், ‘ஸ்பெ‌‌ஷல் டிரீட்ஸ்’ செயலிவழி, 50க்கும் மேற்பட்ட வணிகங்களிடமிருந்து சலுகைகளை பாலர் பள்ளி ஆசிரியர்கள் செப்டம்பர் மாதம் முழுதும் பெறலாம்.

‘பிரீஸ்கூல் மார்கெட்’, AECES இணைந்து பாலர் பள்ளி ஆசிரியர்களுக்காகத் தயாரித்துள்ள அன்பளிப்புப் பைகளை வழங்கும் துணையமைச்சர் கோ பெய் மிங்.
‘பிரீஸ்கூல் மார்கெட்’, AECES இணைந்து பாலர் பள்ளி ஆசிரியர்களுக்காகத் தயாரித்துள்ள அன்பளிப்புப் பைகளை வழங்கும் துணையமைச்சர் கோ பெய் மிங். - படம்: சாவ்பாவ்
குறிப்புச் சொற்கள்