சிங்கப்பூரில் உள்ள மலாய், முஸ்லிம் சமூகத்தினர் தங்களுக்குத் தேவையான ஆதரவுத் திட்டங்களை எளிதாகப் பெற புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
M³+ Directory என்ற அந்த இணையத்தளத்தில் பல்வேறு அமைப்புகளின் உதவித் திட்டங்களும் சேவைகளும் ஒருங்கே தொகுக்கப்பட்டு இடம்பெற்றுள்ளன.
இதில் நிதி உதவி, வேலைவாய்ப்பு போன்ற பல வகையான முக்கியமான பிரிவுகள் அடங்கும்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ஹார்ட்பீட்@பிடோக் (Heartbeat@Bedok) கட்டடத்தில் இந்தத் திட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது இதனை அறிவித்தார்.
“ஒரு பெற்றோர், ஓர் இளையர் அல்லது வேலை மாறுபவர் தங்களுக்குத் தேவையான வாய்ப்புகளை எந்த அமைப்பிடம் பெறுவது எனக் குழம்பக் கூடாது. உதவி பெறும் வழிகளை நம் அமைப்புகள் மேலும் எளிதாக்க வேண்டும். அமைப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து இணைந்து செயல்படவும் இந்த இணையத்தளம் உதவும்,” என்றார் திரு ஸாக்கி.
மலாய்/முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எம்3+ கட்டமைப்பு, எம்3 கட்டமைப்பின் விரிவாக்கமாகும்.
எம்3 கட்டமைப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல்முறையாகத் தொடங்கப்பட்டது. அதில் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்), மெண்டாக்கி, மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழுக்கள் மன்றம் ஆகியவை இடம்பெற்றன. பின்னர் அது விரிவாக்கம் கண்டது.
இந்தப் புதிய இணையத்தளத்தை ‘முதற் படி’ என்று குறிப்பிட்ட திரு ஸாக்கி, வரும் மாதங்களில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். மாறிவரும் உலகிற்கு மலாய்/முஸ்லிம் சமூகத்தைத் தயார்ப்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொள்கை உருவாக்கத்தில் சமூகத்தின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக விரிவுபடுத்தப்பட்ட CiptaSama@M³ என்ற திட்டத்தையும் அமைச்சர் ஸாக்கி அறிமுகப்படுத்தினார்.
சமூகத்தினர் நம்பிக்கை, அறிவு, மனிதநேயம், அடையாளம் ஆகிய நான்கு அம்சங்களில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


