மத்திய வர்த்தக வட்டாரத்தில் புதிய நல்வாழ்வு நிலையம்

மத்திய வர்த்தக வட்டாரத்தில் புதிய நல்வாழ்வு நிலையம்

2 mins read
7032fb29-2966-4eac-8129-78097bb244b5
உடல் வலி, விளையாட்டுகள் மூலம் ஏற்படும் காயங்களால் ஏற்படும் வலி ஆகியவற்றைச் சமாளிக்க உதவும் தசை எலும்பியல் உடலியக்கப் பயிற்சியைச் செய்து பார்த்த மனிதவள மற்றும் வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர் ஃபூ செஸியாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள ஊழியர்கள் தங்களது அலுவலகங்களுக்கு அருகிலேயே ஆலோசனை பெறவும் மன அழுத்தம் மற்றும் உடல் வலிக்குச் சிகிச்சை பெறவும் உதவும் வகையில் ‘கேப்பிட்டல் டவர்’ கட்டடத்தில் புதிய நல்வாழ்வு நிலையம் ஒன்று செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 15) திறக்கப்பட்டது.

‘டச்பாயிண்ட்@கேப்பிட்டல் டவர்’ என்று அழைக்கப்படும் இந்த மையம், பணியிலிருக்கும் பெரியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மனநலம், உடல் ஆரோக்கியம் மற்றும் மின்னிலக்க நல்வாழ்வு தொடர்பான உதவிகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘டச் கம்யூனிட்டி சர்விசஸ்’ என்ற சமூக சேவை அமைப்பும், கேப்பிட்டல் டவரைத் தலைமையகமாகக் கொண்ட ‘கேப்பிட்டலேண்ட்’ சொத்து நிறுவனமும் இணைந்து இந்த நிலையத்தைத் தொடங்கியுள்ளன.

பணியிடச் சவால்கள், மனக்கவலை, மன அழுத்தம் மற்றும் உறவுமுறைச் சிக்கல்களுக்கு தனிநபர் மற்றும் குடும்ப ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், விழிப்புணர்வு பயிற்சிகளையும் கவனக்குறைவு மற்றும் மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு போன்றவற்றுக்கான உளவியல் மதிப்பீடுகளையும் இந்த நிலையம் வழங்கும்.

பணியிலிருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும் திறந்திருக்கும் இந்த இடத்தில், மதிய உணவு இடைவேளையின்போது பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கலைவழிச் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மனிதவள மற்றும் வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர் ஃபூ செஸியாங், ஒரே நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் பணிச்சுமையைக் கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மக்கள் மனவுறுதியோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க உதவுவதில் பணியிடங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். பணியிட ஆதரவுத் திட்டங்களைப் பயன்படுத்தும் ஊழியர்களிடையே மனச்சோர்வு மற்றும் வேலைக் களைப்பு கணிசமாகக் குறைவாக இருப்பதாக மனிதவள அமைச்சின் 2026ஆம் ஆண்டுப் பணிச்சூழல் அறிக்கை சுட்டிக்காட்டுவதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

“சிங்கப்பூர் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வரும் வேளையில், முதலாளிகள், சமூக அமைப்புகள் மற்றும் சேவை வழங்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நல்வாழ்வை ஏதோ ஒரு பிற்சிந்தனையாக இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு இதுபோன்ற மேலும் பல பங்காளித்துவங்கள் உருவாக வேண்டும்,” என்று திரு ஃபூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஆரோக்கியம்ஆலோசனைசிகிச்சை