தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லேயில் புதிய பேருந்து சந்திப்பு நிலையம் திறப்பு

2 mins read
5efa0079-5436-4181-90b0-44b32782049b
உட்லே எம்ஆர்டி நிலையத்தை நேரடியாக இணைக்கும் உட்லே பேருந்து சந்திப்பு நிலையம் அங்கிருக்கும் உட்லே வில்லேஜ் ஒருங்கிணைந்த மேம்பாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல ஆண்டுகால தாமதத்துக்குப் பின் உட்லே பேருந்து சந்திப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20ஆம் தேதி) திறப்பு விழா கண்டது.

கொவிட் கொள்ளைநோய், பல்வேறு பொறியியல் துறை சவால்களால் அது பல ஆண்டுகள் காலதாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பேருந்து சந்திப்பு நிலையத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்ததாகவும் தற்பொழுது அது வந்துள்ள நிலையில் தாங்கள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் அங்கு வாழும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உட்லே எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து சந்திப்பு நிலையம், உட்லே வில்லேஜ் ஒருங்கிணைந்த மேம்பாட்டு வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் 330 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் ஓர் உணவு அங்காடி நிலையமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கமாகச் சேவை எண் 146, 148 என இரண்டு பேருந்துச் சேவைகள் அங்கிருந்து இயங்கும் என்று கூறப்படுகிறது. அந்தப் பேருந்துச் சந்திப்பு நிலையம் ஏழு பேருந்துச் சேவைகள் இயங்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இந்தப் பேருந்துச் சந்திப்பு நிலையம் 2021ஆம் ஆண்டுக் கட்டி முடிக்கப்பட உள்ளதாக இருந்தது. ஆனால், கொள்ளை நோய் தொடர்பான தாமதம் மற்றும் கட்டுமானத்தில் இருந்த சவால்கள் காரணமாகக் கால நேரத்துடன் கட்டி முடிக்கப்பட இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது. உதார[Ϟ]ண[Ϟ]மாக, அங்கு நில அகழ்வுப் பணிகளுக்காக நீர்க் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எஸ்பிஎஸ் சேவை எண் 146 உட்லே பேருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் புதிய சேவைத் தடத்தில் கூடுதலாக நான்கு பேருந்து நிறுத்தங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உட்லே பேருந்து நிலையம், பொத்தோங் பாசிரை இணைக்கும் புதிய வட்ட சேவையாக பேருந்து சேவை எண் 148 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து சேவை, பேருந்துச் சந்திப்பு நிலையத்தை இணைப்பதுடன் உட்லே மால், உட்லே வில்லேஜ் உணவு அங்காடி நிலையம், உட்லே மற்றும் பொத்தோங் பாசிரில் உள்ள பள்ளிகள், வரவிருக்கும் பிடாடாரி பலதுறை மருந்தகம் ஆகியவற்றுக்கும் சேவை வழங்கும் என எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்