ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் திரண்டனர்

புதிய வசதிகளுடன் புத்தாண்டுக் குதூகலம்

2 mins read
0f1c9f0c-347d-47a0-a0aa-97633fb7ed4a
ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இணைந்து மகிழ்ந்தனர். - படம்: பே. கார்த்திகேயன்

தாய்நாட்டைவிட்டுத் தள்ளி இருந்தாலும் சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் புத்தாண்டுக் குதூகலத்தில் திளைத்தனர்.

காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 1) வெளிநாட்டு ஊழியர்களுக்கான புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது.

ஆடல், பாடல், உணவோடு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு நிலையத்திற்கு வந்து இளைப்பாறும் ரத்தினசாமி மகேந்திரன், 30, ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.

மின்னியல் துறையில் பணியாற்றி வரும் அவர் தமிழகத்தில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடும் அனுபவத்திற்காக ஏங்கினாலும் சிங்கப்பூரில் அதே உணர்வு கிட்டுவதாகச் சொன்னார்.

பிற்பகல் 1.15 மணியளவில் 1,500 வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

“சிங்கப்பூரில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு இல்லை. தமிழகத்தில் இருப்பதுபோல இருக்கிறது. பொழுதுபோக்கு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் எனக்கு மகிழ்ச்சி அளித்தன. குறிப்பாக, அதிர்ஷ்டக் குலுக்கின்போது என் பெயர் வருமா என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் கட்டுமானத் துறையில் பணியாற்றும் பாலகிருஷ்ணன் குகன், 35.

சிங்கப்பூர் தாய்நாட்டு உணர்வை அளிப்பதாகச் சொல்கிறார் வெளிநாட்டு ஊழியர் பாலகிருஷ்ணன் குகன்.
சிங்கப்பூர் தாய்நாட்டு உணர்வை அளிப்பதாகச் சொல்கிறார் வெளிநாட்டு ஊழியர் பாலகிருஷ்ணன் குகன். - படம்: பே. கார்த்திகேயன்

புதிய வசதிகளுடன் மறுசீரமைப்பு

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாகக் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களைக் கூடுதலாக இன்புற வைக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் ‘ஹோப் வில்லேஜ்’ எனும் ஒருங்கிணைந்த சமூக மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இது 2028ஆம் ஆண்டு வரை செயல்படும். பொழுதுபோக்கு நிலையத்துக்கு அப்பாற்பட்டு வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வெடுக்கவும், ஒருவருக்கொருவர் இணையவும், கற்றுக்கொள்ளவும், முன்னேறவும், ஒரு பாதுகாப்பான, பல வசதிகளை உள்ளடக்கிய இடமாக ஹோப் வில்லேஜ் திகழும்.

பொழுதுபோக்கு, திறன் மேம்பாடு, சுகாதாரம், சட்ட உதவி, கலை வெளிப்பாடு, சமூகப் பிணைப்பு ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின்கீழ் மையம் ஒருங்கிணைக்கும்.

வரும் மாதங்களில் பொழுதுபோக்கு நிலையத்தில் குறைந்த விலையில் உணவுவகைகள், பொருள்கள், மொழித்திறன், மின்னிலக்க அறிவு, நிதிசார் அறிவு, தொழில்நுட்பத் திறன்கள் போன்றவற்றை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுகள், மருத்துவப் பரிசோதனைகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

“ஏற்கெனவே எங்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போதுமானதாக உள்ளன, இருப்பினும், புதிய வசதிகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்,” என்று கட்டுமான ஊழியர் முருகையா பாலசண்முகநாதன், 43, கூறினார்.

குறிப்புச் சொற்கள்