புத்தாண்டு டோட்டோ குலுக்கலில் கிட்டத்தட்ட $8 மில்லியன் பரிசுத்தொகையை மூன்று வெற்றிச் சீட்டுகள் பகிர்ந்துகொண்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) இரவு நடந்த இந்தக் குலுக்கலில் 11, 18, 20, 32, 38, 39 ஆகியவை வெற்றி எண்கள். உபரி எண் 34.
ஜனவரி 2 டோட்டோ குலுக்கலுக்கான பரிசுத்தொகை ஆரம்பத்தில் $5 மில்லியனாக இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய குலுக்கலில் முதல் பரிசை எவரும் வெல்லாததால், பரிசுத்தொகை $6.8 மில்லியனாக உயர்ந்தது.
இறுதியாக, முதல் பரிசு ஏறக்குறைய $7.9 மில்லியனாகக் கூடியது. இதில் ஒவ்வொரு வெற்றிக் குலுக்கல் சீட்டுக்கும் $2,653,368 கிடைத்தது.
வெற்றிச் சீட்டுகளில் ஒன்று ‘குவிக்பிக் சிஸ்டம் 7 என்ட்ரி’ மூலம் வாங்கப்பட்டது. மற்றொன்று ‘ஐடோட்டோ சிஸ்டம் 12’ மூலமும் மூன்றாவது சீட்டு அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளையிலும் வாங்கப்பட்டன.
மொத்தம் 12 எண்களைக் கொண்டுள்ள ‘ஐடோட்டோ’ சீட்டு, 28 பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பங்கின் விலை $33 எனும் நிலையில், ஒருவர் எத்தனைப் பங்குகளை வேண்டுமானாலும் வாங்கலாம். 12 எண்களைக் கொண்டுள்ள வழக்கமான ‘சிஸ்டம் 12’ சீட்டின் விலை $924.
இதற்கிடையே, ஜனவரி 2 டோட்டோ குலுக்கலில் ‘குரூப் 2’ பிரிவில் 17 வெற்றியாளர்கள் இருந்தனர். இதில் ஒவ்வொருவரும் ஏறத்தாழ $98,000 வென்றனர்.

