நியூயார்க்: அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் பனிப்புயலில் சிக்கியுள்ளது. அந்நகருக்கு அருகில் உள்ள வட்டாரங்களிலும் கடும் பனிப்புயல் வீசிவருகிறது.
நியூயார்க்கிலும் அதனைச் சார்ந்த ‘லோங் ஐலன்ட்’ தீவிலும் வெள்ளி, சனி (டிசம்பர் 26, 27) ஆகிய இரு தினங்களிலும் கடுமையான பனிப்பொழிவு தாக்கும் என்று அமெரிக்க வானிலை கணிப்பு மையம் வியாழக்கிழமை (டிசம்பர் 25) தெரிவித்துள்ளது.
சுமார் 400க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்தாகிவிட்டன. அவற்றில் உள்நாட்டு, அனைத்துலக விமானச் சேவைகளும் அடங்கும். நியூயார்க்கின் ‘லாகார்டியா’, ‘ஜான்எஃப் கென்னடி’, ‘நிவார்க்’ ஆகிய விமான நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகராட்சி அலுவலகம், பனிப்புயலுக்கான பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பனிப்புயலின்போது பனி உருகும் வாய்ப்புள்ளதால், சாலைகளில் வாகனங்கள் அபாயமான நிலையில் பயணிக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நியூயார்க் நகருக்குச் செல்லும் சேவைகளும், அங்கிருந்து புறப்படும் சேவைகளும் ரத்தாகியுள்ளது குறித்து அதன் இணையத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிலைமை மோசமடையும்போது மற்ற சேவைகளும் பாதிப்படையலாம் என்று அது கூறியுள்ளது.
அண்மைய நிலவரம் பற்றி அறிந்துகொள்ள அதன் இணையப்பக்கத்தைப் பார்க்கும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணம் ரத்தான அனைத்துப் பயணிகளையும் அது தொடர்புகொள்ளும் எனவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் அல்லது பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

