மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் பதவி விலகுவதைத் தொடர்ந்து கடல்துறை வழக்கறிஞர் கோ ஸி கீ, இந்தப் பொதுத் தேர்தலில் அங்குப் புதுமுக வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
2012ஆம் ஆண்டு முதல் கட்சி ஆர்வலராக இருந்து வரும் திருவாட்டி கோ, ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகமானார்.
2020ஆம் ஆண்டு முதல் மசெகவின் புக்கிட் தீமா கிளையில் செயலாளராக அவர் சேவையாற்றி வந்தார்.
பதின்ம வயது இளையர்கள் இருவருக்குத் தாயாரான திருவாட்டி கோ, அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு நோக்கத்தை உணர்வதால் இம்முறை வேட்பாளராகக் களமிறங்குவதாகத் தெரிவித்தார்.
“சிங்கப்பூருக்குத் திருப்பித் தரவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளேன்,” என்றார் அவர்.
மக்கள் சீர்திருத்தக் கூட்டணி அவரை எதிர்த்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு லிம் பியாவ் சுவான், முன்னாள் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தலைமையில் இயங்கி வந்த மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அணியில் செயலாற்றிவந்தார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியானது.
தொடர்புடைய செய்திகள்
மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு லிம், நகரமன்ற விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
மேலும் 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத் துணை நாயகராகவும் பணியாற்றினார்.
“திரு லிம், மவுண்ட்பேட்டன் வட்டாரத்தில் அமைத்த அடித்தளம் மிக உறுதியானது. தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவருடைய முயற்சிகளைத் தொடர்வேன்,” என்று திருவாட்டி கோ உறுதியளித்தார்.

