ஜூவலில் புதிய வடிவில் திறக்கப்படவுள்ள ‘போக்கிமோன் சென்டர்’

ஜூவலில் புதிய வடிவில் திறக்கப்படவுள்ள ‘போக்கிமோன் சென்டர்’

1 mins read
99a92b88-b3e2-4211-a865-59eaee6d6f66
போக்கிமோன் சொல்கேலியோ பாத்திரம். - படம்: லா டெரேக்கா டியாரியோ

ஜூவல் சாங்கியில் புதுப்பிக்கப்பட்டுள்ள ‘போக்கிமோன் சென்டர்’ நிலையம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

புதுப்பிக்கப்பட்டுள்ள போக்கிமோன் நிலையத்தில் சிங்கப்பூர் சூழலை மையமாகக் கொண்டுள்ள காட்சிகளும் பொருள்களும் இருக்கும். பிரபலமாக இருந்துவரும் போக்கிமோன் சொல்கேலியோ (Pokemon Solgaleo), பிக்காச்சு போன்ற பாத்திரங்கள் சிங்கப்பூர் சூழலில் இருப்பதைப் போன்ற காட்சிகள் மக்களை வரவேற்கும்.

சூரியனைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் சொல்கேலியோ, சிங்கப்பூரில் உள்ள போக்கிமோன் நிலையத்தின் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘சிங்க நகரம்’ (Lion City) என்றும் சிங்கப்பூர் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பிப்புப் பணிகளுக்காக போக்கிமோன் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மூடப்பட்டிருக்கிறது. ஜப்பானைத் தவிர வெளிநாடுகளில் இருக்கும் போக்கிமோன் நிலையம் ஒன்று முழுமையாக புதுப்பிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று சிங்கப்பூரின் போக்கிமோன் நிறுவனத்தின் கிளை தெரிவித்தது.

நிலையத்தின் வடிவமைப்பு, சிங்கப்பூரின் கலாசார மரபின் அம்சங்களை உள்ளடக்கியது. போக்கிமோன் நிலையம் மீண்டும் திறக்கப்படுவதைக் கொண்டாடும் வகையில் அந்நிகழ்வைச் சித்திரிக்கும் பொருள்கள் விற்பனைக்கு விடப்படும். அவற்றில் சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறும்.

புதிய போக்கிமோன் நிலையத்துக்குப் போக அதிகமானோர் விரும்பக்கூடும். அதனால் ஜூலை ஒன்றிலிருந்து ஐந்தாம் தேதி வரை முன்பதிவுகளின் மூலமாக அங்கு செல்லலாம். அந்தந்த நாள்களில் வரிசையில் நின்று நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

நிலையத்துக்குப் போக கட்டணம் கிடையாது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்