சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு புதிய குழுத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அப்பகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத் தொகுதி இரண்டு குழுத் தொகுதிகளாகப் பிரிக்கப்படும்.
அவை இரண்டும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுத் தொகுதிகளாக இருக்கும்.
பொங்கோல் வட்டாரத்தில் உள்ள சில குடியிருப்புப் பகுதிகளையும் பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியையும் சேர்த்து புதிய பொங்கோல் குழுத் தொகுதி அமைக்கப்படுகிறது.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் எஞ்சியுள்ள குடியிருப்புப் பேட்டைகளும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் கிழக்கு முனைப் பகுதிகளில் சில இடங்களும் புதிய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியில் இடம்பெறும்.
தொகுதி எல்லைகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வெளியிட்டது.
அக்குழு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 2,651, 435ஆக இருந்தது.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 2,753,226ஆக உயர்ந்துள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை தீவெங்கும் சீரான முறையில் அதிகரிக்கவில்லை என்பதை குழு சுட்டியது.
மற்ற தொகுதிளைக் காட்டிலும் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி, செம்பவாங் குழுத் தொகுதி, தெம்பனிஸ் குழுத் தொகுதி, ஹொங் கா நார்த் தனித்தொகுதி, பொத்தோங் பாசிர் தனித் தொகுதி ஆகியவற்றில் வாக்காளர் எண்ணிக்கை அதிகளவில் ஏற்றம் கண்டது.
இந்த வட்டாரங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டதும், பலர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை வாங்கி குடிபுகுந்தததும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்தத் தொகுதியில் மக்கள் தொகை அதிகளவில் உயர்ந்துள்ளது.
பொங்கோல் வட்டாரத்தில் கட்டப்பட்ட தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் (பிடிஓ) இதற்கு முக்கிய காரணம்.
அத்தொகுதியில் கூடுதல் வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியில் 161,952 வாக்காளர்கள் இருந்தனர்.
இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 184,593ஆக ஏற்றம் கண்டுள்ளது.
புதிய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியில் 100,639 வாக்காளர்கள் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியிலிருந்து 87,768 வாக்காளர்களும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியைச் சேர்ந்த 12,871 வாக்காளர்களும் இனி பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

