மரண தண்டனைக் கலந்துரையாடலுக்காக இஸ்‌ரேலியக் குழு சிங்கப்பூர் வந்ததாக வெளியான செய்தி பொய்யானது: அமைச்சர் சண்முகம்

மரண தண்டனைக் கலந்துரையாடலுக்காக இஸ்‌ரேலியக் குழு சிங்கப்பூர் வந்ததாக வெளியான செய்தி பொய்யானது: அமைச்சர் சண்முகம்

கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

08 Oct 2026 - 5:26 pm

2 mins read

இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் சிங்கப்பூர் வந்து இங்குள்ள அதிகாரிகளுடன் மரண தண்டனை குறித்துக் கலந்தாலோசித்ததாக வெளியான செய்தி முற்றிலும் பொய் என்று மூத்த அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 7), அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவ்ஸி எழுப்பிய கேள்விக்கு, தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான சண்முகம் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், மே மாதத்தில் இஸ்ரேலியக் குழுவினர் ரகசியமாகச் சிங்கப்பூர் வந்து மரண தண்டனை குறித்துப் பேசினர் என்றும் அது முன்னர் திட்டமிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அச்செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதால் உள்துறை அமைச்சு மறுப்பு வெளியிட்டதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

இதன் தொடர்பில், அந்தச் செய்தி ஊடகத்திற்கு பொஃப்மா உத்தரவு ஏன் பிறப்பிக்கப்படவில்லை என்று ஃபட்லி கேட்டிருந்தார்.

பொஃப்மா சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிப்பது அப்போதைய பொதுநலனுக்கு உகந்ததன்று என மதிப்பிடப்பட்டது. எனினும், எதிர்காலத்தில் சூழ்நிலைகள் மாறினால் பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

சிங்கப்பூர் தனது தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, அனைத்துலகப் பங்காளிகளுடன் பாதுகாப்பு, சட்ட அமலாக்க விவகாரங்கள் குறித்துத் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது. இது சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து நாட்டைப் பாதுகாக்க உதவுகிறது என்றார் திரு சண்முகம்.

இஸ்ரேலியக் குழுவுடனான சந்திப்பும் அத்தகைய ஒரு நடவடிக்கை மட்டுமே என்றும் இதில் செயல்பாட்டு, பாதுகாப்பு விவகாரங்கள் மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2025 ஜனவரி முதல் மத்திய கிழக்கு நாடுகளின் பங்காளிகள் உட்பட வெளிநாட்டு அதிகாரிகளுடன் 11 இருதரப்புச் சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பாதுகாப்புக் காரணங்களால் இத்தகைய பரிமாற்றங்களின் தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படுவதில்லை என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்மரண தண்டனைஅமைச்சர்கா சண்முகம்செய்திபொஃப்மாநாடாளுமன்ற உறுப்பினர்கேள்வி