சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள இரு முதன்மை குடியிருப்பு நிலங்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏப்ரல் 7ஆம் தேதி விற்பனைக்கு விட்டது.
அதில் ஒன்று பெக் ஹே சாலையிலும் மற்றொன்று ரிவர் வேலி கிரீன் பகுதியிலும் அமைந்துள்ளன.
மத்திய பகுதியில் குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், அவ்விரு இடங்களையும் கையகப்படுத்த கடும் போட்டி இருக்கும் எனச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு நிலத்தையும் ஏலத்தில் எடுக்க தலா எட்டு விண்ணப்பங்கள்வரை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இரு 99 ஆண்டு குத்தகைக்கால நிலங்களும் 2026ஆம் ஆண்டின் முற்பாதிக்கான அரசாங்க நில விற்பனை திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
வழக்கமாக, உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள நிலங்கள் சந்தை தேவையைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்ட அட்டவணைப்படி விற்பனைக்கு விடப்படும்.
அதற்கு மாறாக, இருப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள், அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையை மேம்பாட்டாளர்கள் முன்வைக்கும்போது மட்டுமே ஏலத்திற்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூட்டன் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பெக் ஹே சாலையில் இருக்கும் நிலத்தில் கிட்டத்தட்ட 315 புதிய தனியார் வீடுகளைக் கட்டியெழுப்ப முடியும். 5,513.5 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அப்பகுதியின் அதிகபட்ச மொத்த நிலப் பரப்பளவு 27,017 சதுர மீட்டராகும்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 7ஆம் தேதி விற்பனைக்கு விடப்பட்ட ரிவர் வேலி கிரீன் பகுதியில் அமைந்துள்ள நிலம், கிரேட் வோர்ல்ட் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
11,516 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தில் 470 வீடுகள் கட்ட முடியும் எனக் கூறப்படுகிறது. இது கிரேட் வோர்ல்ட் பகுதியில் கிடைக்கும் கடைசி நிலம் என்பதால், அதை வாங்க நில மேம்பாட்டாளர்களிடையே கடும்போடி நிலவும் என இஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த சூ தெரிவித்தார்.

