நெக்ஸ் கடைத்தொகுதியின் அடுக்குமாடி கார் நிறுத்தும் தளத்தில் நேர்ந்த விபத்தின் தொடர்பில் 73 வயது ஆடவர் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகிறார். விபத்து இம்மாதம் (டிசம்பர் 2025) 6ஆம் தேதி நேர்ந்தது.
அன்று பிற்பகல் 2.30 மணிக்கு சிராங்கூன் சென்ட்ரல் வட்டாரத்தில் நான்கு கார் சம்பந்தப்பட்ட விபத்துக் குறித்த தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கடைத்தொகுதியின் முகவரியிலிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறியது.
சுய நினைவுடன் இருந்த 66 வயது கார் ஓட்டுநரும் அவருடன் இருந்த 60 வயது பெண் பயணியும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து நேர்ந்தபோது பதிவுசெய்யப்பட்ட காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது. அதில் வெள்ளி நிற கார் ஒன்று மூன்றாம் தளத்திலிருந்து இரண்டாம் தளத்திற்கு அதிவேகமாகச் சாய்வுதளத்தில் வருவதைக் காணமுடிகிறது. அது இரண்டாம் தளத்திற்கு வந்தபோது, அங்குக் குறுக்கே நின்றிருந்த கார்மீது மோதியது. இதனால் மோதப்பட்ட கார், அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேறு இரு கார்களுடன் மோதியது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

