ஒசாகா: சிங்கப்பூர்-ஜப்பான் உறவுகளின் அடுத்த அத்தியாயம் இன்னும் துடிப்புமிக்கதாகவும் முன்னோக்கிச் செல்லக்கூடியதாகவும் இருக்கும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பு, காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் ஒரு பிணைப்பு மட்டுமல்ல, ஆண்டு செல்லச் செல்ல செழித்து வளரக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான அரசதந்திர உறவு அடுத்த ஆண்டு 60வது ஆண்டைத் தொடும் வேளையில் திரு லீ அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாடுகள் ஒன்றையொன்று மதித்தும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடனும் இணைந்து பணியாற்றினால் என்ன சாதிக்கமுடியும் என்பதற்கு சிங்கப்பூர்-ஜப்பான் உறவு ஒரு சான்று என்றார் அவர்.
ஜப்பான் சென்றிருக்கும் மூத்த அமைச்சர் லீ, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) ஒசாகா உலகக் கண்காட்சியில் நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்த ஆறு மாதக் கண்காட்சி ‘நமது வாழ்க்கைக்கான வருங்காலச் சமூகத்தை வடிவமைத்தல்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்று வருகிறது.
அதில் பங்கேற்கும் நாடுகள் அவற்றின் தேசிய தினச் சிறப்புகளை எடுத்துக்கூற வாய்ப்பளிக்கப்படும். கண்காட்சியின் தேசிய தின அரங்கில் நடத்தப்படும் அந்தக் கொண்டாட்டங்களில் ஒவ்வொரு நாடும் தங்களது தனித்துவமான கலாசாரங்களை எடுத்துரைக்கலாம்.
அந்த வகையில், சிங்கப்பூர், ஜப்பான் தேசிய கீதங்கள் இசைக்க, அவ்விரு நாடுகளின் தேசியக் கொடிகளின் ஏற்றத்துடன் சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பான் சார்பில் முதன்மை அமைச்சரவைச் செயலாளர் யோஷிமாசா ஹலாஷி பங்கேற்றார்.
திரு லீ தமது உரையில், “பலதரப்பட்ட விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும் வேளையில், அனைத்துலக ஒத்துழைப்பை இரட்டிப்பாக்க வேண்டியது அவசியமாகிறது,” என்றார்.
“அதனை உணர்ந்ததால்தான் ஜப்பானும் சிங்கப்பூரும் உறவுகளை வலுப்படுத்தவும் பல்வேறு வழிகளில் ஒத்துழைக்கவும் தயாராகி வருகின்றன.
“ஒசாகா உலகக் கண்காட்சி போன்ற உலகளாவிய நிகழ்வில் பங்கேற்பது, இணைந்து பணியாற்றினால் நினைத்ததைவிட அதிகம் சாதிக்கமுடியும் என்பதை நினைவூட்டக்கூடியது,” என்றார் அவர்.