தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங், 2017ல் கல்வி அமைச்சராக இருந்தபோது அமைச்சின் கலந்துரையாடலில் நடந்துகொண்ட முறை குறித்து குறைகூறல் எழுந்த நிலையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அத்துடன், புதிய அரசாங்கத்தில் தமக்குப் பதவி ஏதும் தரவேண்டாம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“பிரதமர் அதைப் பரிசீலிக்க ஒப்புக்கொண்டார்,” என்று செவ்வாய்க்கிழமை (மே 6) வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜாலான் காயு தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாம் கல்வி அமைச்சராக இருந்தபோது 2017ஆம் ஆண்டு கல்வி அமைச்சு நடத்திய கலந்துரையாடலில் கடுமையாக நடந்துகொண்டதாக இணையத்தில் பரவிய தகவல்களுக்கும் பணமோசடியில் தொடர்புடைய சைபிரஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளி சு ஹைஜினுடன் காணப்படும் படம் குறித்தும் திரு இங் பதிலளித்தார்.
“அன்றைய தினம் நான் பயன்படுத்திய சொற்கள் எனக்கு நினைவில்லை. குறிப்பாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவமதிக்கும் விதமாக எனது கருத்து அமைந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்,” என்றார் அவர்.
“நிலைமையை நான் மேம்பட்ட முறையில் கையாண்டிருக்கலாம். மனமார மன்னிப்பு கோருகிறேன். இதன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்கிறேன். தொடர்ந்து மேம்பட்ட முறையில் செயலாற்றுவேன்,” என்று திரு இங் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் அன்றாடப் பணியைத் தாம் மிகவும் மதிப்பதாகவும் நமது மாணவர்களின் வாழ்வில் அவர்கள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2017ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சில் பணியாற்றிய ஒருவர் இன்ஸ்டகிராமில் தொடர்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். அமைச்சர் ஒரு கேள்விக்குக் கோபமாகப் பதிலளித்ததாகவும் பங்கேற்பாளர்கள் புனைகதைகளைப் படிக்கிறார்களா என்று கேட்டதாகவும் அந்தப் பதிவுகள் கூறின.
“அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜாலான் காயு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ‘என்டியுசி’ தலைமைச் செயலாளராகவும் எனது கடமைகளில் கவனம் செலுத்துவேன். எனது குடியிருப்பாளர்கள் மற்றும் சிங்கப்பூர் ஊழியர்கள் அனைவரின் தேவைகள்தான் எனது முன்னுரிமைகள்,” என்று திரு இங் கூறினார்.
பணமோசடியில் தொடர்புடைய சு இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சி குறித்துக் கருத்துரைத்த அவர், ‘என்டியுசி’ தலைமைச் செயலாளர் என்ற முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பலருடன் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அந்த விருந்தும் அத்தகையதொரு நிகழ்ச்சி என்றும் கூறினார்.
பிறகுதான் சு மீதான காவல்துறை விசாரணை குறித்து அறிந்துகொண்டதாகக் கூறிய திரு இங், சுவுடன் தமக்கு அதன்பிறகு தொடர்பு ஏதும் இல்லை என்று கூறினார்.