மீண்டும் அமைச்சரவையில் இங் சீ மெங்: ஊழியர்களுக்கு வலுவான கருத்துரிமை

மீண்டும் அமைச்சரவையில் இங் சீ மெங்: ஊழியர்களுக்கு வலுவான கருத்துரிமை

2 mins read
3b487d2a-d9b6-43b8-92e2-5e9adce39a9c
பிரதமர் அலுவலக அமைச்சராகத் திரு இங் சீ மெங் திங்கட்கிழமை (ஜூலை 27) பொறுப்பேற்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் அமைச்சரவைக்குத் திரும்புவது, நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஊழியர்களின் கருத்துரிமையை மேலும் வலுப்படுத்தும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கருத்துரைத்துள்ளனர்.

பிரதமர் அலுவலக அமைச்சராகத் திரு இங் சீ மெங் திங்கட்கிழமை (ஜூலை 27) பொறுப்பேற்கிறார். இதன் மூலம், கடந்த ஆறாண்டுகளாகத் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறாமல் இருந்த நிலை முடிவுக்கு வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் வேலைகளில் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்கள் ஏற்படும் இக்காலகட்டத்தில், அமைச்சரவைக்குத் திரு இங் திரும்புவது மிகவும் முக்கியமானது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர்.

குறிப்பாக, வேலையிடமும் ஊழியரணியும் வேகமாக உருமாறிவரும் வேளையில், தேசியக் கொள்கைகளிலும் உத்திகளிலும் ஊழியர்களின் கருத்துகளையும் கவலைகளையும் அரசாங்கத்திடம் நேரடியாகக் கொண்டுசேர்க்க இது உதவும்.

2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையிலிருந்து விலகிய திரு இங், 2025 தேர்தலில் ஜாலான் காயு தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.

ஊழியரணி உருமாற்றத்துக்கும் வேலைகளுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுவரும் வேளையில், திரு இங் அமைச்சரவைக்குத் திரும்புவது பொருத்தமானது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் திரு இங் இடம்பெறுவது அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு உறவை மேலும் உறுதிப்படுத்தும். அத்துடன், வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்புகள், நடுத்தர வருமான ஊழியர்களுக்கான ஆதரவு குறித்த ஊழியர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் அரசாங்கத்திடம் நேரடியாகக் கொண்டுசேர்க்க இது சிறந்த தளமாக அமையும் என்று தொழிற்சங்கவாதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சம்பளம் பெறாத வெளிநாட்டு ஊழியர்களின் விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளையும் மாற்று வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தர திரு இங் அண்மையில் வழிவகை செய்தார்.

கள நிலவரத்திற்கு மிக அணுக்கமாகச் செயல்பட்டுவரும் திரு இங்கின் இந்த மறுநியமனம், ஊழியர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

குறிப்புச் சொற்கள்