தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் நாளடைவில் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 21) கூறியுள்ளார்.
திரு இங், ஜாலான் காயு தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
தமக்கு அரசாங்கப் பொறுப்பு தர வேண்டாம் என்று அண்மையில் அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், என்டியுசி தலைமைச் செயலாளர் அமைச்சரவையில் இடம்பெறுவது வழக்கம் என்றார் பிரதமர் வோங்.
“என்டியுசி தலைமைச் செயலாளருக்கும் அமைச்சரவைக்கும் உள்ள இணைப்பை நான் பெரிதும் மதிக்கிறேன். என்டியுசியும் இதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். என்டியுசி, ஜாலான் காயு தனித்தொகுதி தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த விரும்பும் திரு இங், தமக்கு அரசாங்கப் பொறுப்பு கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அவரது விருப்பத்தை நான் மதிக்கிறேன்.
“ஆனால், இந்த ஏற்பாடு தற்காலிகமானது. என்டியுசியின் தலைமைச் செயலாளர் நாளடைவில் அமைச்சரவையில் இடம்பெறுவதை எதிர்பார்க்கிறேன்,” என்றார் திரு வோங்.
இதற்கிடையே, தொழிலாளர் இயக்கத்துடன் தனது அரசாங்கம் தொடர்ந்து மிக அணுக்கமாக இணைந்து செயல்படும் என்று பிரதமர் வோங் உறுதி அளித்தார்.
“என்டியுசி, தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோரின் கருத்துகள், சிங்கப்பூர் ஊழியர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன்,” என்றார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 51.47 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நூலிழையில் வெற்றி பெற்றார் திரு இங்.
பாட்டாளிக் கட்சியின் ஆண்ட்ரே லோ அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.
தேர்தலுக்குப் பிறகு, திரு இங் தொடர்பான சர்ச்சைகள் தலைதூக்கின.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி அமைச்சு கலந்துரையாடலில் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து குறைகூறப்பட்டது.
அதுமட்டுமல்லாது, திரு இங் கலந்துகொண்ட இரவு விருந்து தொடர்பாகவும் சர்ச்சை கிளம்பியது.
அந்த விருந்தில் ஃபூஜியேன் குண்டர் கும்பல் உறுப்பினர் சூ ஹான்ஜினும் கலந்துகொண்டார்.
விருந்தில் கலந்துகொண்ட மற்றவர்களுடனும் சூ ஹான்ஜினுடனும் திரு இங் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பான வழக்கில் சூ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
என்டியுசியின் தலைமைச் செயலாளராகத் திரு இங் 2018ஆம் ஆண்டிலிருந்து பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர், அமைச்சரவையில் இடம்பெறாத முதல் தொழிலாளர் இயக்கத் தலைவராவார்.