இங் சீ மெங்: விரைவில் உங்களைச் சந்திப்பேன்

2 mins read
dba93972-9dbc-41b2-b857-629ac75efefd
குடிமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங். - படம்: இங் சீ மெங்/ ஃபேஸ்புக்

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளரான இங் சீ மெங், விரைவில் உங்களைச் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

ஃபெர்ன்வேல், ஜாலான் காயு பகுதிகளில் குடிமக்களைச் சந்தித்த அவர், அவர்கள் அளித்த ஆதரவுக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் செங்காங்கில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் திரு இங் பங்கேற்றது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்தன. அவர், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜாலான் காயு தனித் தொகுதியில் அந்த ‘ஃபெர்ன்வேல் குடும்ப கேளிக்கை நிகழ்ச்சி 2025’ நடைபெற்றது. தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டபோது அங் மோ கியோ குழுத் தொகுதியிலிருந்து ஜாலான் காயு பிரிக்கப்பட்டு தனித் தொகுதியாக மாறியது.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய திரு இங், தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்து தக்க தருணத்தில் மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்று குறிப்பிட்டார்.

இது, அவர் தேர்தலில் போட்டியிடுவதை மேலும் உறுதி செய்வதுபோல இருந்தது. ஏப்ரல் 2ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட படங்களில் ஃபெர்ன்வேல், ஜாலான் காயுவில் அவர் வீடு வீடாகச் சென்று குடிமக்களைச் சந்திப்பது தெரிந்தது.

திரு இங்கின் பயணம் எதிர்பாராதது அல்ல. இதற்கு முன்பு திரு இங், வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க முயற்சி செய்ததைக் காட்டும் அட்டைகளை மக்கள் செயல் கட்சியினர் வீட்டின் கதவுகளில் தொங்கவிட்டுச் சென்றனர்.

அண்மைய பதிவில் திரு இங், மக்கள் செயல் கட்சிக்குப் பதிலாக என்டியுசியின் சின்னமுள்ள சட்டையை அணிந்து மக்களைச் சந்தித்ததைப் பார்க்க முடிகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் செங்காங்கில் போட்டியிட்டு தோல்வியடைவதற்கு முன்பு அவர் மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முழுநேர அமைச்சராகவும் இருந்தார்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைப் பதவியில் ஓர் அமைச்சர் மட்டுமே இருப்பது பாரம்பரியமாகும். ஆனால் ஓர் அமைச்சர் அல்லாத திரு இங் அப்பதவியில் பங்காற்றி வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் செயல் கட்சித் தேர்தலில் அவர் மத்திய செயற்குழுவில் இடம்பிடித்தார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலிலும் அவர் மீண்டும் செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த வாரம் மக்களின் வீடுகளுக்குச் சென்றதாக திரு இங்கின் பதிவு தெரிவிக்கிறது.

வேலை தொடர்பான பிரச்சினைகளுக்காக சில குடியிருப்பாளர்கள் தம்மைத் தொடர்பு கொண்டதாகவும் அது குறித்து கவனிப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

குடியிருப்பாளர்களை தமக்கு அறிமுகம் செய்துவைத்த கான் தியாம் போ, இங் லிங் லிங் மற்றும் தொண்டூழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அங் மோ கியோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கானும், லிங் லிங்கும் முறையே ஃபெர்ன்வேல் வட்டாரத்தையும் ஜாலான் காயு பகுதியையும் பிரதிநிதிக்கின்றனர். தற்போது அந்த இரு வட்டாரங்களையும் சேர்த்து ஜாலான் காயு தனித் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்