அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி

4 mins read
ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரசார ஓய்வுநாள்; செப்டம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு
9b6f4230-00d9-4165-a8eb-6d46b63f15b6
அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத் தலைவர் இங் கொக் சொங் (இடது), முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான் ஆகிய மூவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத் தலைவர் இங் கொக் சொங், 75, முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான், 75 ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தேர்தல் அதிகாரி டான் மெங் டுயி பிற்பகல் 12.39 மணிக்கு அம்மூவரையும் வேட்பாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

நண்பகல் 12 மணி காலக்கெடுவிற்கு முன்னரே, அவர்கள் மூவரும் ஜாலான் புசாரில் உள்ள மக்கள் கழகத் தலைமையகத்தில் அமைந்திருக்கும் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தைச் சென்றடைந்தனர்.

இப்போது வேட்பாளர்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகினால், $40,500 என்ற தேர்தல் வைப்புத்தொகையை இழந்துவிடுவர்.

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் போட்டியிடும் மூவரும் அதிகாரபூர்வமாகத் தங்களின் பிரசாரத்தைத் தொடங்கலாம்.

பிரசாரம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நிறைவுபெறும்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரசார ஓய்வு நாள். அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும்.

இதற்கிடையே, வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் கூடியிருந்தவர்களிடம் ஆற்றிய இரண்டு நிமிட உரையில், நாட்டைத் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக வெளிக்காட்டும் சிங்கப்பூரின் மூன்று தேசிய பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்காக அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக திரு இங் கூறினார்.

முதல் பொக்கிஷம், சிங்கப்பூரின் இருப்புகள். தாம் வேலைசெய்த காலம் முழுவதையும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்திலும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திலும் கழித்ததால் சிங்கப்பூரின் இருப்புகளைத் தம்மால் பாதுகாக்க முடியும் என்றார் அவர்.

நல்ல பொது நிர்வாகமும் சமூக நிலைத்தன்மையும் அவர் குறிப்பிட்ட மற்ற இரு பொக்கிஷங்கள்.

“நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அதனால் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கு சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைக்க நான் சரியான இடத்தில் இருக்கிறேன்,” என்று திரு இங் கூறினார்.

திரு இங் கொக் சொங் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் உரையாற்றுகிறார்.
திரு இங் கொக் சொங் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் உரையாற்றுகிறார். - படம்: ஸ்டெர்ய்ட்ஸ் டைம்ஸ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு இங், சிங்கப்பூர் மக்களுக்கு உண்மையாகச் சேவையாற்றுவதற்கான பணியைத் தாம் மேற்கொண்டிருப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். அதனால் தமது நாட்டிற்கு மேலும் ஒருமுறை சேவையளிப்பதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் மக்கள் தமக்குக் கொடுக்கிறார்கள் என்பது குறித்து உற்சாகம் அடைவதாகத் திரு இங் சொன்னார்.

இதனிடையே, கண்ணியமான, கௌரவமான போட்டியைத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார் திரு தர்மன்.

ஒவ்வொரு வேட்பாளரும், சிங்கப்பூரர்களுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் எதனைக் கொண்டுவருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.

“சிங்கப்பூரர்கள் இடையே பிளவை ஏற்படுத்தாமல், சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான பிரசாரத்தை எதிர்பார்ப்போம்,” என்று கூடியிருந்த அனைவரிடமும் திரு தர்மன் கூறினார்.

திரு தர்மன் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் ஆதரவாளர்களின் முன்னால் அன்னாசிப் பழம் ஒன்றை ஏந்திப் பிடித்திருக்கிறார்.
திரு தர்மன் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் ஆதரவாளர்களின் முன்னால் அன்னாசிப் பழம் ஒன்றை ஏந்திப் பிடித்திருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பதவிகளுக்கோ நிலைப்பாடுகளுக்கோ தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். தமது வாழ்க்கையில் வைத்திருக்கும் நீண்டகால நோக்கத்தின் காரணமாகப் போட்டியிடுவதாக அவர் சொன்னார்.

“நான் மேலும் நியாயமான, மேலும் பரிவான, அனைவரையும் மேலும் உள்ளடக்கும் சமுதாயத்தில் நம்புகிறேன். என் வாழ்க்கையை அதற்கு அர்ப்பணிக்கிறேன். சிங்கப்பூர் சிறப்புமிக்க நாடாகத் திகழ முடியும்,” என்றார் திரு தர்மன்.

இந்நிலையில், ஆளுங்கட்சியைச் சாராத ஒருவருக்கு வாக்களிக்க, சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புவதாகத் திரு டான் தெரிவித்துள்ளார்.

திரு டான் கின் லியான் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் ஆதரவாளர்களிடம் பேசுகிறார்.
திரு டான் கின் லியான் வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் ஆதரவாளர்களிடம் பேசுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசமைப்புச் சட்டத்தின்படி தமது பணிகளைக் கடமையுணர்ச்சியுடனும் உண்மையாகவும் தம்மால் இயன்ற அளவுக்கு நிறைவேற்றப்போவதாகத் திரு டான் கூறினார்.

நாட்டின் இருப்புகளைப் பாதுகாப்பதற்கும் பொதுச் சேவையின் நேர்மையைக் கட்டிக்காப்பதற்கும் அந்தப் பணிகளை மேற்கொள்ளப்போவதாக அவர் சொன்னார்.

அதிபர் வேட்பாளர்களின் சின்னங்கள்

(இடமிருந்து) திரு இங், திரு தர்மன், திரு டான் தேர்ந்தெடுத்துள்ள சின்னங்கள்.
(இடமிருந்து) திரு இங், திரு தர்மன், திரு டான் தேர்ந்தெடுத்துள்ள சின்னங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதனிடையே, மூன்று வேட்பாளர்களும் தங்கள் சின்னங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

திரு இங்கின் சின்னம், உள்ளங்கை தாங்கிப் பிடிக்கும் ஓர் இதயம். திரு தர்மனின் சின்னம், அன்னாசிப் பழம். திரு டானின் சின்னம், நான்கு பேர் மலர் ஒன்றைப் பிடிப்பதைக் காட்டுகிறது.

ஐந்து விரல்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு இனங்களைக் குறிப்பதாகத் திரு இங் கூறினார். மக்கள் வெவ்வேறு இனங்களிலிருந்தும் சமயங்களிலிருந்தும் வந்தாலும் நாம் ஓர் உள்ளங்கை, ஒரு நாடு என்பதை உள்ளங்கை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இனம், சமயம், அரசியல் இணைப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புவதாக அவர் கூறினார்.

அன்னாசிப் பழம் இங்குள்ள சமூகங்களுக்குப் பல அர்த்தங்களைக் குறிப்பதாகத் திரு தர்மன் கூறினார்.

ஹொக்கியன் மொழியில் ‘ஒங் லாய்’ என்றழைக்கப்படும் அன்னாசிப் பழம், பலருக்குச் சாதகமான, வரவேற்புச் சின்னமாக உள்ளது என்றார் அவர்.

திரு டான், தமது சின்னம் நல்லிணக்கத்துடன் வாழ்வதை எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள முக்கிய இனக் குழுக்களைப் பிரதிநிதிக்கும் நான்கு தனிமனிதர்கள், மேம்பட்ட எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப் பிரதிநிதிக்கும் ஒரு மலரை எட்டுவதைத் தமது சின்னம் காட்டுவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்