ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கு நீ ஆன் கொங்சி அறநிறுவனம் மொத்தம் $4.8 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை நீ ஆன் கொங்சி அறநிறுவனத்தின் அனைத்துலக தொழில்முனைவர் விருதுக்குப் பயன்படுத்தப்படும் என்று ஆகஸ்ட் 22ஆம் தேதி நீ ஆன் டெவலப்மெண்ட் அலுவலகத்தில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.
தொழில்முனைப்புக் கல்வித் திட்டங்களை மேற்கொள்ளும் மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விப் பயணங்களில் பங்கேற்க இந்தத் தொகை உதவும்.
இதன்மூலம், அந்த நான்கு பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு நான்கு பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கும் தலா $1.2 மில்லியன் அளிக்கப்படும்.
கல்வி எப்போதும் நீ ஆன் கொங்சி அறநிறுவன நோக்கத்தின் மையமாக இருந்து வருகிறது என்று அதன் தலைவர் சியா சோர் மெங் குறிப்பிட்டார்.
மாணவர்கள் வளர்ந்து, வெளிநாடுகளில் முத்திரை பதித்து சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு மீண்டும் பங்களிப்பதைக் காண ஆவலுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்
கடந்த 2022ஆம் ஆண்டுமுதல் நீ ஆன் கொங்சி அறநிறுவனம் இதுவரை அனைத்துலக தொழில்முனைவர் விருதுக்கு ஆதரவாக மொத்தம் $9 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்
அவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி நல்லதம்பி காவ்யா, 19, கடந்த 2023ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான ‘புத்தாக்க, தொழில்முனைவர்’ வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாகத் தாய்லாந்து சென்றார்.
தனக்கான விமானச்சீட்டுகள், தங்குமிடம் என்று 90 விழுக்காட்டுச் செலவு நன்கொடைமூலம் ஈடுகட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. அதனால், இந்த நன்கொடை மிகவும் பயனளிக்கிறது.
“மேலும் பல மாணவர்கள் கல்விப் பயணங்கள் மேற்கொள்ளவும் இது ஊக்கமளிக்கிறது,” என்றார் காவ்யா.
ஒவ்வொரு பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்தும் ஏறத்தாழ 70 விழுக்காடு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கல்வி அமைச்சின் நோக்கத்தை நீ ஆன் கொங்சி அறநிறுவனத்தின் நன்கொடை ஆதரிக்கிறது.
கல்விப் பயணங்களில் 70 விழுக்காடு ஆசியான் நாடுகள், சீனா அல்லது இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.