போதிய அளவு நிதியோ சொத்தோ இருப்பில் இல்லாத ஆடவர், மருமகன் செய்த மோசடி குற்றத்துக்கான $1.5 மில்லியன் பிணைத்தொகைக்கு உத்தரவாதம் வழங்கினார்.
பிணை சம்பந்தப்பட்ட அக்குற்றத்துக்காக சுவா எங் கியாம் என்ற 68 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தனியார் வாடகை வாகன ஓட்டுநரான சுவா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நிக்கல் எனப்படும் ஒருவகை வெள்ளை உலோக மோசடிக்காக சுவாவின் மருமகன் இங் யூ ஸி என்ற 38 வயது ஆடவர்மீது கடந்த 2023 ஜனவரி மாதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. பல முதலீட்டாளர்களிடம் இருந்து 2021 மார்ச் முதல் 2022 மார்ச் வரையில் $1 பில்லியன் மதிப்புள்ள மோசடியில் ஈடுபட்ட குற்றத்தை அவர் எதிர்நோக்கினார்.
நீதிமன்றம் அவரின் பிணைத்தொகையை $6 மில்லியன் என்று நிர்ணயித்தது.
அதே ஆண்டு மார்ச் மாதம் இருவரின் உத்தரவாத்தின் அடிப்படையில் இங் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரின் தந்தை $4.5 மில்லியனும் குவெக் சின் சுவான் என்ற மற்றோர் ஆடவர் $1.5 மில்லியனும் உத்தரவாதம் வழங்கினர்.
ஆனால் 2023 ஜுன் மாதத்தில் குவெக் சின் சுவானுக்கு பதிலாக சுவாவை இங் நியமித்தார். சுவாவிடம் சிலர் கடன் பெற்றதைப்போல் போலியான ஆவணங்களை இங் தயாரித்தார்.
போதிய பணம் இல்லை என்பதை தெரிந்தே இங்குக்கு $1.5 மில்லியன் பிணைத்தொகைக்குப் புதிய உத்தரவாதத்தை சுவா வழங்கினார்,
இங்மீதான குற்றச்சாட்டு தொடர் விசாரணயில் உள்ளது. அவரை சுவாவின் மகள் விவாகரத்து செய்துவிட்டார்.

