மரண அவதியில் தவித்த ‘நைட் சஃபாரி’ பாஷா புலி மண்ணுலகைப் பிரிந்தது

மரண அவதியில் தவித்த ‘நைட் சஃபாரி’ பாஷா புலி மண்ணுலகைப் பிரிந்தது

2 mins read
ad2c210e-e750-4564-a8c3-b396e969ecd4
13 வயது பாஷா (Pasha) புலி. - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்
multi-img1 of 2

‘நைட் சஃபாரி’ என்றழைக்கப்படும் சிங்கப்பூரின் இரவுநேர வனவிலங்குத் தோட்டத்தில் புற்றுநோயுடன் போராடி வந்த வெந்நிற வங்கப் புலி மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் புதன்கிழமை (ஜூலை 1) நிகழ்ந்தது.

பாஷா (Pasha) என்னும் பெயருடைய அந்தப் புலியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததாக ‘நைட் சஃபாரி’யை நடத்தும் மண்டாய் வனவிலங்குக் குழுமம் வியாழக்கிழமை (ஜூலை 2) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்கு ஒத்துழைக்காமலும் நல்லதொரு வாழ்க்கையை அனுபவிக்காமலும் 13 வயதுடைய அந்தப் புலி சிரமப்பட்டு வந்ததாக அது தெரிவித்தது.

“அதனால், விரிவான முறையில் கால்நடை மதிப்பீடு செய்யப்பட்டது. புற்றுநோயால் அவதிப்படும் புலி மேலும் துன்பப்படுவதைத் தடுக்க, மனிதாபிமான முறையில் அதனைத் கருணைக்கொலை செய்வது என அந்த மதிப்பீட்டின்போது முடிவுசெய்யப்பட்டது,” என்று குழுமத்தின் கால்நடை மருத்துவர் டிரென்ட் வான் ஸான்டென் கூறினார்.

13 வயது என்பது பாஷாவின் முதுமையைக் குறிக்கிறது. வயது முதிர்ச்சி காரணமாக அது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் நீண்டகாலமாக கால்நடை மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தது.

கடுமையான மூட்டுத்தேய்மானமும் அது அனுபவித்த சிரமங்களில் ஒன்று. அதன் காரணமாக அந்தப் புலி வேதனையை அனுபவித்ததோடு சரிவர நடமாட முடியாமலும் போனது என்றார் திரு வான் ஸான்டென்.

“பின்னர், இவ்வாண்டு புற்றுநோயின் தீவிரத்தன்மையைக் குறிக்கும் லிம்ஃபோமாவால் அது பாதிக்கப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அந்த நோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆண் புலியை நலமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படும் சாத்தியமான சிகிச்சை முறைகளை ஆராய, எங்கள் விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் இணைந்து பணியாற்றின.

“சில சமயங்களில் உடல்நிலையில் நிலைத்தன்மை காணப்பட்டபோதிலும், தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த மருத்துவ உதவிகள் பலன் தராமல் பாஷாவின் உடல்நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியது,” என்று அவர் விளக்கினார்.

“பாஷா புலி இந்த உலகைவிட்டு நீங்கிய தருணம் அவனைப் பராமரித்த குழுவினர் அவனைச் சுற்றி நின்றிருந்தனர்,” என்றார் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பராமரிப்பாளர் ஆனந்த் குமார்.

குறிப்புச் சொற்கள்
வனவிலங்குமண்டாய்புலிபுற்றுநோய்