சிங்கப்பூரின் ‘ஏஐ’ அணுகுமுறை பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டது: துணைப் பிரதமர் கான்

2 mins read
598ad042-0df0-41b3-9d4f-eee7f282e717
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கின் குழு விவாதத்தில் கலந்துகொண்டு துணைப் பிரதமர் கான் கிம் யோங் பேசினார். - படம்: புளூம்பெர்க்

செயற்கை நுண்ணறிவைத் தழுவுவதில் சிங்கப்பூரின் அணுகுமுறை புரிந்து செயல்படக்கூடியதாகவும் நீக்குப்போக்கானதாகவும் இருக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார்.

அதேநேரம், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நெறிமுறைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கின் ஓர் அங்கமான குழு விவாதத்தில் கலந்துகொண்டு திரு கான் பேசினார்.

செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் சிங்கப்பூர் மிகவும் தாராளமாக, குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை எதுவுமின்றி உள்ளதா என்று, நிகழ்ச்சியை வழிநடத்திய புளூம்பெர்க் தொலைக்காட்சி நெறியாளர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர், “அது திருத்தப்பட வேண்டிய கூற்று,” என்றார்.

பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான மிகவும் விரிவான விதிமுறைத் தொகுப்பை சிங்கப்பூர் உருவாக்கி இருப்பதாகவும் அதுபோன்ற வழிமுறைகளை வகுப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் கலந்துபேசப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“எனவே, செயற்கை நுண்ணறிவுத் திறனைக் கடைப்பிடிப்பதில் நாங்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுகிறோம்.

“விதிமுறைகள் என்று வரும்போது, அந்தத் தொழில்நுட்பத்தின் ஆரம்பநிலை அம்சங்கள், விதிகளுக்கு உட்பட்டு இன்னும் பரிசோதிக்கப்பட்டு வருவதால், அதிகாரிகள் மிகவும் இலகுவான முறையைக் கையாள்வார்கள்.

“எந்தவொரு தொழில்நுட்பமும் முதிர்ச்சி நிலையை அடையும் வரை அதனை ஒழுங்குபடுத்துவது எவ்வாறு என்பது தொடக்கத்தில் தெரியாது. இருப்பினும், பாதுகாப்பான சூழலுக்கு உட்பட்டு அந்தத் தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சிங்கப்பூர் அணுக்கமாகக் கண்காணிக்கும்.

“தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளது என்பது உறுதியானதும் நீக்குப்போக்கான நடைமுறையை சிங்கப்பூர் அனுமதிக்கும்,” என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.

குறிப்புச் சொற்கள்