நிலப் போக்குவரத்து ஆணையம் இம்மாதத்தின் இரண்டாம் பாதியில் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் சட்டவிரோதமாக வாகனச் சேவை வழங்கிய ஒன்பது ஓட்டுநர்கள் பிடிபட்டனர்.
ஓட்டுநர்களின் வாகனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
அராப் ஸ்திரீட், மரீனா பே கப்பல் முனையம், மார்சிலிங் ரோடு, சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தபோது அந்த ஓட்டுநர்கள் சிக்கியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் மற்றும் தேசிய டாக்சி சங்கம் வழங்கிய தகவல்களைக் கொண்டு சோதனை நடத்தியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், பிடிபட்ட ஓட்டுநர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று போக்குவரத்திற்கான மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) பதிவிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு உரிமம் இல்லை, அதில் பயணிகளுக்கான போதுமான காப்புறுதியும் இல்லை என்று அமைச்சர் ஷுவெலிங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் டாக்சி அல்லது தனியார் வாடகை வாகனச் சேவை வழங்க விரும்புபவர்கள் பொதுச் சேவை வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் மலேசியப் பதிவு எண் கொண்ட டாக்சிகள் ஆசியான் பொதுச் சேவை வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த இரண்டு உரிமங்களும் நிலப் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்படும்.
சிங்கப்பூரிலும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கும் சட்டவிரோதமாக வாகன சேவைகளை வழங்குவோர்களைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் அமைச்சர் ஷுவெலிங் தெரிவித்தார்.
சட்டவிரோத வாகனச் சேவைக்கு உதவும் செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலி ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகல் பிளே ஸ்டோர் தளங்களிலும் நீக்கப்பட்டுள்ளன.